சினிமா
வித்தார்த் - ரம்யா நம்பீசன்

உண்மை சம்பவத்தில் விதார்த் - ரம்யா நம்பீசன்

Published On 2020-11-19 20:29 IST   |   Update On 2020-11-19 20:29:00 IST
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் என்றாவது ஒரு நாள் படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்கள்.
பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.

எதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த் இதில் நாயகனாக நடித்துள்ளார். வித்தியாசமான தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் 'சேதுபதி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராகவன் நடித்துள்ளார்.



'தி தியேட்டர் பீப்பிள்' என்ற நிறுவனம் இந்தப் படத்தின் மூலம் படங்கள் தயாரிப்பில் இறங்குகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டராக மு.காசி விஸ்வநாதன் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Similar News