சினிமா
விஜய் சேதுபதி, பாரதிராஜா

முரளிதரன் நம்பிக்கை துரோகி.... அவர் பயோபிக்கில் நடிப்பதை தவிருங்கள் - விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

Published On 2020-10-15 07:06 GMT   |   Update On 2020-10-15 07:06 GMT
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிப்பதை தவிர்க்குமாறு விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா, சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர் . விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன். 



எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளிதரன் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே... என கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத் துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகம் வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா. 

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News