முன்னணி இயக்குனர்களான கவுதம் மேனன் - வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள அந்தாலஜி படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் - வெற்றிமாறன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
பதிவு: அக்டோபர் 01, 2020 16:06
வெற்றிமாறன், கவுதம் மேனன்
திரையுலகில் தற்போது அந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இயக்குனர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் மேனன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ஒரு அந்தாலஜி படத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில், அந்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘பாவ கதைகள்’ என பெயரிடப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் மேலும் இரண்டு அந்தாலஜி படங்கள் தயாராகி வருகின்றன. ‘புத்தம் புது காலை’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி மணிரத்தினம் ஆகியோர் இயக்கி உள்ளனர். இதனை அமேசான் பிரைம் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்ற அந்தாலஜி படத்தை கவுதம் மேனன், வெங்கட்பிரபு, ஏ.எல் விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.