சினிமா
பவன் கல்யாண்

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரசிகர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published On 2020-09-02 20:10 IST   |   Update On 2020-09-02 20:10:00 IST
நடிகரும் அரசியல் பிரமுகருமான பவன் கல்யாணின் பிறந்தநாளுக்காக பேனர் வைத்த போது அவரது ரசிகர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த சாந்திபுரம் கடப்பல்லியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரா (வயது32). சோமசேகர் (30). அருணாசலம் (25) ஹரி, சுப்ரமணியம், அருண்குமார், 6 பேரும் நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகர்கள். ராஜேந்திரா பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்து வந்தார். அருணாசலம் பேக்கரி நடத்தி வந்தார்.

ஜனசேனா கட்சி ஆரம்பித்துள்ள நடிகருமான பவன் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் 6 பேரும் நேற்று இரவு குப்பம் பலமநேர் சாலையில் 30 அடி உயர பிறந்த நாள் வாழ்த்து பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பியில் பேனர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி 6 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் ராஜேந்திரா, சோமசேகர், அருணாச்சலம் 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அங்கிருந்தவர்கள் காயமடைந்த ஹரி, சுப்பிரமணியம், அருண்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குப்பம் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். இது குறித்து நடிகர் பவன் கல்யாண் கூறியிருப்பதாவது: என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து பேனர் கட்டியதில் 3 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் பெற்றோர்களுக்கு நான் மூத்த பிள்ளையாக இருந்து அவர்கள் துயரைத் துடைக்க பாடுபடுவேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என கூறியுள்ளார். இறந்தவர்களில் ராஜேந்திராவும், சோமசேகரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News