சினிமா
கங்கனா ரணாவத்

பாலிவுட் விருந்துகளில் போதை பொருள் தாராளமாக புழங்குகிறது - கங்கனா பகீர் புகார்

Published On 2020-08-28 11:40 IST   |   Update On 2020-08-28 11:40:00 IST
பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளில் போதை பொருள் தாராளமாக புழங்குவதாக நடிகை கங்கனா பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. எடுத்து விசாரிக்க தொடங்கியதில் இருந்து தினமும் பரபரப்பான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியின் செல்போன் வாட்ஸ் அப்பில் இருந்து அழிக்கப்பட்ட ஒரு குறுந்தகவல் மூலம் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து நடிகை கங்கனா ரணாவத் டுவிட்டரில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது: “இந்தி திரையுலகில் கொக்கைன் போதை பொருள் தாராளமாக புழங்குகிறது. இந்த போதை பொருள் அதிக விலை கொண்டது. ஆனால் முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளுக்கு சென்றால் அதை இலவசமாகவே வழங்குவார்கள். எம்.டி.எம்.ஏ படிகங்களை தண்ணீரில் கலந்து உங்களுக்கு தெரியாமலேயே தரவும் செய்வார்கள். 



இதுசம்பந்தமாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். போதை பொருள் தடுப்பு போலீசார் இந்தி பட உலகுக்குள் நுழைந்தால் பிரபலங்கள் பலர் சிறைக்கு செல்வார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனைகள் செய்தால் அதிர்ச்சியான உண்மைகள் வெளிவரும். 

நான் மைனர் பெண்ணாக இருந்தபோது ஒருவர் எனக்கு குளிர்பானத்தில் போதை பொருளை கலந்து கொடுத்தார். பிரபலமானபிறகு பெரிய படங்களின் பார்ட்டிகளுக்கு செல்லும்போது அங்கு போதை பொருள் மாபியா உலகம் இயங்குவதை பார்த்து அதிர்ந்தேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News