சினிமா
சூர்யகாந்த்

சாப்பாட்டுக்கே வழியில்லை... உதவி கேட்கும் வில்லன் நடிகர்

Published On 2020-08-15 07:58 GMT   |   Update On 2020-08-15 07:58 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் உதவி கேட்டிருக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் வேலையில்லாமல் இருக்கும் துணை நடிகர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கி உதவினார்கள்.

படப்பிடிப்புகளுக்கு அரசு இன்னும் அனுமதி வழங்காததால் துணை நடிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பாக்யராஜின் ‘தூரல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூரியகாந்த் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து சூர்யாகாந்த் கூறுகையில், பாக்யராஜ் தான் என்னை ‘தூரல் நின்னு போச்சு’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறேன். கடைசியாக கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.

தற்போது திரைப்பட படப்பிடிப்புகளும் இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளும் சரியாக நடக்கவில்லை. அதனால் பொருளாதார ரீதியாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு மருந்து மாத்திரை வாங்கவே ரூ.1500 செலவாகிறது. அதை வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சாப்பாட்டுக்க வழியில்லாமல் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News