சினிமா
சூர்யா

கேரள விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சூர்யா இரங்கல்

Published On 2020-08-11 12:02 GMT   |   Update On 2020-08-11 12:02 GMT
கேரளாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
நாட்டில் கொரோனாவால் ஊரடங்கு அமலான பின்னர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இதேபோன்று கடந்த வெள்ளி கிழமை துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர். விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.

அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகிலுள்ள நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கேரள அரசும் மத்திய அரசும் அறிவித்துள்ளன.

விபத்து நிகழ்ந்தவுடனே உள்ளூா் பொதுமக்களும் அதிகாரிகளும் இணைந்து மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டனர். கொரோனா பீதி, மோசமான வானிலை ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால்தான் மிகப்பெரிய அளவில் விபத்து நடந்தபோதிலும், உயிரிழப்பு குறைவாக இருந்தது.



இந்நிலையில் மலப்புரம் மக்களுக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் சூர்யா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். மலப்புரம் மக்களுக்கு சல்யூட். விமானிகளுக்கு என்னுடைய மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Tags:    

Similar News