சினிமா
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன்

அமிதாப், அபிஷேக்குக்கு கொரோனா - விரைவில் குணமடைய திரைப்பிரபலங்கள் பிரார்த்தனை

Published On 2020-07-12 06:26 GMT   |   Update On 2020-07-12 06:26 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

இந்தியளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்காக டுவிட்டரில் பல்வேறு ஹாஷ்டேக்குகளை ரசிகர்கள் உருவாக்கி தங்களின் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியான செய்தி அறிந்த நடிகர் தனுஷ், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் பால்கி இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சனுடன், தனுஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று பரவிய செய்தி அறிந்தவுடனே, தனது டுவிட்டர் பக்கத்தில், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, வெகு விரைவாக குணம் அடைந்து, முழு ஆரோக்கியத்துடன் நடிகர் அமிதாப் பச்சன் வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

மீண்டும் உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வருவீர்கள் சாம்பியன் என நடிகை டாப்சி, அமிதாப் குறித்து டுவிட் செய்துள்ளார். இவர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து பிங்க் மற்றும்  பாட்லா போன்ற போன்ற படங்களில் நடித்திருந்தார். 

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டும், அது அவரால் முடியும், 77 வயதாகும் அமிதாப் பச்சன், திரையுலகில் இன்னும் 23 ஆண்டுகள் சாதிக்க வேண்டியது நிறையவே உள்ளது என பதிவிட்டுள்ளார். எஸ்.ஜே. சூர்யா இயக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மோகன் லால், துல்கர் சல்மான், அனுபமா பரமேஸ்வரன், க்ரீத்தி சனோன், பரிணீத்தி சோப்ரா, ரகுல் ப்ரீத் சிங், ரந்தீப் ஹுடா, சோனம் கபூர் என இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News