சினிமா
திலீப்

மீண்டும் தீவிரமாகும் திலீப் வழக்கு - நடிகை ரம்யா நம்பீசனிடம் குறுக்கு விசாரணை

Published On 2020-06-24 13:17 IST   |   Update On 2020-06-24 13:17:00 IST
கொரோனாவால் தடைபட்ட திலீப் வழக்கின் விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகையை 2017-ம்  ஆண்டு கேரளாவில் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம்பிடித்த சம்பவம் திரையுலகையே உலுக்கியது. கடத்தியவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பிரபல மலையாள நடிகர் திலீப்பும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு 85 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 136 பேர் இதில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணையை ஆறு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சாட்சிகள் தினமும் வாக்குமூலம் அளித்து வந்தனர். நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட சிலர் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது.



நடிகர்கள் லால், இடைவேளை பாபு ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் 24-ந் தேதி விசாரணையை நிறுத்தி வைத்தனர். தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. நடிகை ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரிடம் குறுக்கு விசாரணை நடக்கிறது.

Similar News