சினிமா
சோனம் கபூர்

வாரிசு நடிகையாக இருப்பது அவமானம் இல்லை... பெருமை - நெட்டிசன்களுக்கு சோனம் கபூர் பதிலடி

Published On 2020-06-24 12:28 IST   |   Update On 2020-06-24 12:28:00 IST
வாரிசு நடிகையாக இருப்பது அவமானம் இல்லை என்றும், அதை பெருமையாக நினைப்பதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பட வாய்ப்புகளை இவர்கள் தடுத்ததாலேயே மன அழுத்தத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எதிராக ரசிகர்கள் பிரசாரம் செய்கின்றனர். 

நடிகர் சத்ருகன் சின்காவின் மகளும் நடிகையுமான சோனாக்சி சின்ஹாவையும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டதால் அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறினார். பிரபல இந்தி நடிகர் அனில்கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூரின் வலைத்தள பக்கத்திலும் ரசிகர்கள் அவருக்கு எதிராக அவதூறு கருத்துகள் பதிவிட்டனர். வாரிசு அரசியலால்தான் சோனம் கபூருக்கு இந்தி பட வாய்புகள் கிடைத்துள்ளன என்றும் வசை பாடினர். 



இதற்கு பதில் அளித்துள்ள சோனம் கபூர், ‘’நான் எனது தந்தையின் மகள்தான். அவரால்தான் எனக்கு இந்த இடம் கிடைத்து இருக்கிறது. விஷேச சலுகையும் பெற்றுள்ளேன். இது எனக்கு அவமானம் இல்லை. பெருமையாகவே நினைக்கிறேன். என்னை இந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கு எனது தந்தை கடுமையாக உழைத்துள்ளார். 

நான் யாருக்கு பிறந்தேன் என்பது எனது விதி. எனது தந்தைக்கு மகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். நடிகை சோனம் கபூர், தனுஷ் ஜோடியாக ராஞ்சனா என்கிற இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Similar News