சினிமா
பூனம் கவுர்

சுஷாந்த்துக்கு நடந்தது போல் எனக்கும் நடந்தது - இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் பரபரப்பு புகார்

Published On 2020-06-19 13:29 IST   |   Update On 2020-06-19 13:29:00 IST
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை பூனம் கவுர் இயக்குனர் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் கவுர். தொடர்ந்து பயணம், விஷாலின் வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் வசிக்கும் பூனம் கவர் பிரபல தெலுங்கு இயக்குனர் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். 

இயக்குனர் பெயரை குறிப்பிடாமல் டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “ஒரு பிரச்சினை குறித்து பேச இயக்குனரை சந்தித்தேன். அவரிடம் எனது கஷ்டத்தை சொல்லி சரிபடுத்த முடியுமா என்று கேட்டேன். தற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறது என்றும் கூறினேன். உடனே அந்த இயக்குனர் நீ செத்தால் அது ஒரு நாள் செய்தி என்றார். அந்த பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சினிமா மாபியா அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. அவரால் மன அழுத்தம் ஏற்பட்டது.



நடிகைகள் தேர்வு பட்டியலில் இருந்து என்னை நீக்கினார். எனது பட வாய்ப்பை தடுத்தார். அவருக்கு பிடித்தவர்களை மட்டும் நடிக்க வைத்தார். நான் நடிக்க தடை விதிக்க பார்த்தார். அவரது நண்பர் ஒருவரை மனைவியுடன் சேர விடாமல் தடுத்தார். சுஷாந்த் சிங்குக்கு நடந்தது போலவே எனக்கும் நடந்துள்ளது. சிகிச்சை பெறுகிறேன்.” 

இவ்வாறு பூனம் கவுர் கூறினார்.

Similar News