சினிமா
ஜெ.அன்பழகன்

ஜெ.அன்பழகன் மறைவு - திரைப் பிரபலங்கள் இரங்கல்

Published On 2020-06-10 12:30 GMT   |   Update On 2020-06-10 12:02 GMT
சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் இன்று காலை மரணமடைந்தார். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்ததால் அவரது உடல் தமிழக சுகாதாரத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு கண்ணம்மாபேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த ஜெ.அன்பழகன் அரசியலைத் தாண்டி சினிமாவில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருந்தவர். எனவே திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “சென்னை சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வும், எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினருமான ஜெ.அன்பழகன் இன்று இயற்கை எய்தியதாக வந்த செய்தி எங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவர்களது குடும்பம் இந்த இழப்பில் இருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேபோல் நடிகர் ராகவா லாரன்ஸ், எனது அறக்கட்டளை குழந்தைகளுடன் மறைந்த முதல்வர் கருணாநிதியை ஒருமுறை சந்தித்த போது எனது சமூக பணிகளை பாராட்டினார் ஜெ.அன்பழகன். அவர் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது. அவரது குடும்பத்தாருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். எனது குழந்தைகளும் நானும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.

ஒரு நல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் என்கிற வேதனையோடு மட்டுமல்லாமல் அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளின் உள்ளத்தில் சாந்தியையும் அவரது இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் அமைதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் செந்தில், போஸ் வெங்கட் உள்ளிட்டோரும் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News