சினிமா
நடிகர் மன்சூரலிகான்

இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் - மன்சூரலிகான்

Published On 2020-06-04 15:43 IST   |   Update On 2020-06-04 15:43:00 IST
இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மன்சூரலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் இனவெறி காரணமாக, தலைமை காவலர் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான், இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மன்சூரலிகான் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் மக்களை பீதியடைய செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும்  மக்களிடம் கொரோனா பயத்தை அதிகரிக்க செய்திருக்கும் அரசு, மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்பதை காட்டிலும், பசியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றும், இதற்காக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.



அதே சமயம், அமெரிக்காவில் இனவெறி காரணமாக கொடூரமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு இதய அஞ்சலி செலுத்துவதோடு, இப்படிப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

உலகமே இக்கட்டான சூழலில் இருக்கும் போது, இப்படி ஒரு இனவெறி கொலையை அரங்கேற்றியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதுபோன்ற இனவெறி சம்பவங்களுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மன்சூராலிகான் தெரிவித்துள்ளார்.

Similar News