சினிமா
காட்மேன்

எதிர்ப்புகள் எதிரொலி - காட்மேன் வெப்சீரிஸ் நிறுத்தம்

Published On 2020-06-01 15:02 GMT   |   Update On 2020-06-01 15:02 GMT
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காட்மேன் வெப்சீரிஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜீ5 தளத்தில் ஜூன் 12-ம் தேதி வெளியாக இருக்கும் இத்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் பிராமண சமூகத்திற்கு எதிரானதாகவும், பாலுணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான காட்சிகள் நீக்கப்பட்டு புதிய டீசரும் வெளியிடப்பட்டது.

இருப்பினும் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மீது 6 பிரிவுகளின் கீழ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஜூன் 3-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில், ''எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய கருத்துக்கள் வந்தன. அதன்காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது'' என பதிவிட்டுள்ளது.
Tags:    

Similar News