சினிமா
ராஷ்மிகா

மனிதனாக இருப்பது தான் பாதுகாப்பின்மை - ராஷ்மிகா சொல்கிறார்

Published On 2020-05-24 12:00 GMT   |   Update On 2020-05-24 12:00 GMT
பாதுகாப்பின்மை என்பதன் பொருள் 'மனிதனாக இருப்பது' என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்த நிலையில் சினிமா துறையில் தான் சந்தித்த பாதுகாப்பற்ற நிலை குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "பாதுகாப்பின்மை இந்த வார்த்தையை கூகுளில் தேடினால் ஒரு விஷயம் குறித்து நிச்சயமற்ற தன்மையில் அல்லது அதிக ஏக்கத்துடன் இருப்பது என்று காட்டுகிறது. 

ஆனால் என்னைக் கேட்டால் 'மனிதனாக இருப்பது' என்று பொருள் கூறுவேன். நாம் பல விஷயங்கள் குறித்தும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம். நம்மை குறித்தோ, பிறரை குறித்தோ அல்லது ஏதேனும் ஒரு மோசமான விஷயம் குறித்தோ நாம் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்கிறோம். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவை அர்த்தமற்றதாகத் தெரிகிறது. நாம் நமது நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 



'ப்ரோ.. நான் அதிகம் எடை போட்டு விட்டேனா? ஒல்லி ஆகிவிட்டேனா? எனது ஸ்கின் வறண்டு போய் விட்டதா? அதிக எண்ணெய் தன்மையுடன் இருக்கிறதா? என்று கேட்கிறோம். யாரேனும் 'உன் முகத்திற்கு என்ன ஆச்சு?' என்று கேட்டால் அவ்வளவு தான். 10 நாட்களுக்கு முக்காடு போட்டுக் கொண்டு இருப்போம். இத்தகைய சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி யோசித்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நாம் உணர்வது தேவையானதா என்று நான் யோசிக்கிறேன். 

உண்மையைக் கூறப்போனால் இந்தக் கொரோனா காலத்தில் நான் அதிகம் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறேன். எனது வேலை, என் இதயம், என் புறத்தோற்றம், என் மன ஆரோக்கியம் என அனைத்தையும் பற்றி கவலைப்படுகிறேன். ஆனால் இவை எதுவும் நம் கையில் இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனவே நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டும் கவலைப் படுவோம். நமக்கு இருக்கும் பாதுகாப்பற்ற தன்மையை நமது பலமாக மாற்றிக் கொள்வோம். 

நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள். ஒல்லியாக இருக்கிறீர்கள். உங்கள் கண்கள் பெரிதாக இருக்கின்றன. என யாராவது கூறினால் அதை சரி என்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் இறுதிவரை போராடுங்கள் "என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னம்பிக்கை இழந்து கவலையில் இருக்கும் பலருக்கும் ராஷ்மிகாவின் பதிவு நம்பிக்கையூட்டி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News