சினிமா
மனிஷா கொய்ராலா

இந்தியாவுக்கு எதிராக டுவிட் போட்டு சர்ச்சையில் சிக்கிய இந்தியன் பட நடிகை

Published On 2020-05-22 04:32 GMT   |   Update On 2020-05-22 04:32 GMT
எல்லை பிரச்சனை குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட இந்தியன் பட நடிகைக்கு, டுவிட்டரில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேபாளத்தை சேர்ந்த மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2010-ல் சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேபாள அரசு, தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு உட்பட்ட காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.



நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு நடிகை மனிஷா கொய்ராலா ஆதரவு தெரிவித்து புதிய வரைபடத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்ததுடன், ‘நமது சிறிய நாட்டின் கவுரவத்தை காத்ததற்கு நன்றி’ என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதனால் மனிஷா கொய்ராலாவுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

“இந்தியாவில் சம்பாதித்து சாப்பிட்டு விட்டு எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கம் இல்லையா? எல்லை பிரச்சினையில் நாடுகள் பேசி தீர்வு காணட்டும். தனிநபர் பேசக்கூடாது. நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி நேபாளம் சென்று விடுங்கள்” என்றெல்லாம் கண்டன பதிவுகள் வெளியிடுகின்றனர்.
Tags:    

Similar News