சினிமா
சூர்யா

மாமதுரையின் அன்னவாசல் திட்டத்துக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கிய சூர்யா

Published On 2020-05-11 08:14 GMT   |   Update On 2020-05-11 08:14 GMT
மாமதுரையின் அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
மதுரையில் உணவின்றி தவிப்பவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதிய உணவு தருகிற முயற்சியினை கடந்த மே 1-ம் தேதி `மாமதுரையின் அன்னவாசல்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மதிய உணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் துவங்கப்பட்டது. நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், 'மாமதுரை அன்னவாசல்' திட்டத்துக்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் ரூ. 5 லட்சம் நன்கொடையாக  வழங்கி உள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். 



அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். 

நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 லட்ச ரூபாயை நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்து மகிழ்ந்திருக்கின்றார் திரைக்கலைஞர் சூர்யா. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News