சினிமா
சரத்குமார்

கஷ்டத்தில் இருந்த போது உதவிய சிரஞ்சீவி.... கண்கலங்கிய சரத்குமார்

Published On 2020-05-11 06:33 GMT   |   Update On 2020-05-11 06:33 GMT
நடிகர் சிரஞ்சீவி செய்த உதவியால் தான் கஷ்டத்தில் இருந்து மீண்டதாக நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு ஊடகம் நடத்திய நேரடி நிகழ்ச்சியில் வீட்டில் இருந்தபடியே கலந்துகொண்ட நடிகர் சரத்குமார், சிரஞ்சீவி குறித்து பேசும்போது கண்கலங்கினார். 

அதில் அவர் பேசியதாவது: சிரஞ்சீவி குறித்து பேச மேடைகள் கிடைப்பதில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவியுள்ளார். ஒரு முறை நான் பண பிரச்சினையில் இருந்தேன். அப்போது ஒரு தயாரிப்பாளர், சிரஞ்சீவியிடம் கால்ஷீட் வாங்கி கொடுங்கள், அவரை வைத்து படம் எடுப்போம். அதன் மூலம் வரும் லாபத்தை உங்களுக்குத் தருகிறேன். உங்கள் பிரச்சனையை தீர்க்க அது உதவும் என்றார். 

பின்னர் சிரஞ்சீவியிடம் போனில் பேசி நேரில் சந்திக்க நேரம் கேட்டேன். அவரும் வர சொன்னார். ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரை நேரில் சென்று பார்த்து, பெர்சனலா பேசனும்னு சொன்னேன். அப்போது சண்டைக் காட்சி எடுக்க தயாராகிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் சிரஞ்சீவி அப்படத்தின் இயக்குநரை அழைத்து, நான் சரத்குமாரிடம் பேச வேண்டும், நீங்கள் அந்த சீனை நாளை எடுத்துக்கோங்கனு சொல்லிட்டு என்னை அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். எனக்காக சிரஞ்சீவி படப்பிடிப்பை ரத்து செய்ததே ஆச்சரியமாக இருந்தது.



வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவளித்தார். என்ன பிரச்சினைனு கேட்டார். நான் விவரத்தை சொன்னேன். உங்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டேன். சரி இந்த படத்தை முடித்துவிட்டுத் தருகிறேன் என்றார்.

சம்பளம் குறித்து கேட்டேன், "ஏய், எனக்கு சம்பளமா? நீயே பிரச்சினையில் இருக்கிறாய். எனக்கு சம்பளம் வேண்டாம். நான் கால்ஷீட் தருகிறேன். உன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்" என்றார். இத்தகைய உதவி செய்த அவரை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என கூறி கண்கலங்கினார் சரத்குமார்.
Tags:    

Similar News