சினிமா
விபத்துக்குள்ளான கார்- உயிரிழந்த பேசில் ஜார்ஜ் .

கார் விபத்தில் நடிகர் உள்பட 3 பேர் பலி

Published On 2020-05-04 21:44 IST   |   Update On 2020-05-04 21:44:00 IST
எர்ணாகுளம் அருகே பள்ளி சுவரில் கார் மோதிய விபத்தில் மலையாள நடிகர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் முபாட்டு புழாவை சேர்ந்தவர் பேசில் ஜார்ஜ் (வயது30).

இவர் மலையாள படமான உவல்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நண்பர்கள் சதீஷ்(30), அஷ்வின்(20), ராகவ்(19), சமர்(30), எமோன்(30). இவர்கள் 6 பேரும் நேற்று காரில் முபாட்டு புழாவில் இருந்து வளாகம் நோக்கி சென்றனர்.

இவர்களது கார் வளாகம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்ற போது கட்டுப் பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது.

பின்னர் அங்கிருந்த பள்ளி சுவரின் மீது வேகமாக மோதி நின்றது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதால் காரில் இருந்த 6 பேரும் பலத்த காயத்துடன் வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முபாட்டு புழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த முபாட்டு புழா போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு கோலன்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் பேசில் ஜார்ஜ், சதீஷ், அஷ்வின் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராகவ், அமர், எமோன் ஆகியோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Similar News