சினிமா
பிரசன்னா

மன்னிப்பு கேட்டதுக்கு திட்டுறாங்க - பிரசன்னா வருத்தம்

Published On 2020-04-30 08:28 IST   |   Update On 2020-04-30 08:28:00 IST
பிரபாகரன் சர்ச்சை குறித்து துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னாவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் திட்டி வருவதால் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படம், ‘வரனே அவஷ்யமுண்டு.’ அதில் துல்கர் சல்மானுடன், சுரேஷ்கோபி, சோபனா, கல்யாணி பிரியதர்சன் ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம், கேரளாவில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை புரிந்தது.

படத்தில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவை காட்சியில், சுரேஷ்கோபி வளர்க்கும் நாய்க்கு, ‘பிரபாகரன்’ என்று பெயர் வைத்து அழைப்பார். இது, சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. துல்கர் சல்மான் உள்பட படக்குழுவினர் அனைவரையும் இணையதளங்களில் திட்டி தீர்த்தார்கள்.



இதுபற்றி நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில், “நாம் பேசும் வசனத்தைப் போலவே அவர்கள் ஊரில் இந்த வசனம் பிரபலமானது. தவறான புரிதலின் அடிப்படையில், வெறுப்பை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். இதற்காக பிரசன்னாவுக்கு, துல்கர் சல்மான் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

பிரசன்னா மேலும் கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் என்னை திட்டுகிறார்கள். அதோடு, என் பெற்றோர்கள், மனைவி மற்றும் குடும்பத்தினரையும் திட்டுகிறார்கள். என்னை திட்டுவது சரி, என் குடும்பத்தினரை திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சமூக வலைத்தளங்களில் பிரச்சினைகளை உருவாக்கி, அதை பெரிதுபடுத்துகிறார்கள். அதனால் டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இருந்து வெளிவந்து விடலாமா? என யோசிக்கிறேன்” என்றார்.

Similar News