சினிமா
ரிஷி கபூர்

திடீர் மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரிஷி கபூர்

Published On 2020-04-30 05:19 IST   |   Update On 2020-04-30 05:19:00 IST
பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:

பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். 

பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர் தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ (என் பெயர் ஜோக்கர்) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார். 

தொடர்ந்து 1973-ம் ஆண்டு பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், 2018-ம் ஆண்டு ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. 

இதனால், அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். 

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த ரிஷி கபூருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷி கபூரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Similar News