சினிமா
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் படங்கள்.... தயாரிப்பாளர்-தியேட்டர் அதிபர்கள் மோதல்
பொன்மகள் வந்தால் படத்தை தொடர்ந்து மேலும் சில படங்கள் ஓடிடி ரிலீசுக்கு தயாராவதால் தயாரிப்பாளர்-தியேட்டர் அதிபர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜோதிகா நடித்துள்ள புதிய படம் பொன்மகள் வந்தாள். இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யா தயாரித்துள்ளார். பொன்மகள் வந்தாள் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக இணையத்தில் வெளியிட இருக்கிறார்கள். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்த்துள்ளது.
அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் , இனி சூர்யா தயாரிக்கும் படங்களையும், சூரரை போற்று உள்ளிட்ட அவர்கள் தொடர்புடைய படங்களையும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம்” என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரபல தயாரிப்பாளர் டி.சிவா கூறியதாவது: சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் தயாரான படங்களை வெளியிட இணையதளங்கள் (ஓடிடி) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.
ரூ.3 கோடி ரூ.4 கோடியில் எடுக்கப்பட்ட சிறு படங்களை அந்த தளத்தில் வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இதற்காக சூர்யா படத்துக்கு தடை போடுவது வியாபார உரிமையை பறிக்கும் செயலாக அமையும். பிரச்சினையை தியேட்டர் அதிபர்கள் சுமுகமாக பேசி தீர்க்கலாம். மேலும் 3 தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இணையதளத்தில் வெளியிட உள்ளனர். 5 படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.