சினிமா
ரஜினிகாந்த், கமல்ஹாசன்

சினிமாவில் ரஜினி - கமல் கூட்டணி

Published On 2020-02-27 09:24 GMT   |   Update On 2020-02-27 09:24 GMT
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். 1970-80களில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி, ‘ஆடு புலி ஆட்டம், அலாவுதீனும் அற்புத விளக்கும், 16 வயதினிலே’ போன்ற பல படங்கள் வெற்றிப்படங்களாகவும் காலம் கடந்து நிற்கும் படங்களாகவும் அமைந்தன.

ஒரு கட்டத்தில், ‘இருவரும் இணைந்து நடித்தால் சம்பளம் போதுமானதாக கிடைக்காது; இனி தனித்தனியாகவே நடிப்போம்‘ என, இருவரும் முடிவு செய்தனர். இதன்படி, தனித்தனியாக நடிக்க துவங்கிய இருவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். 

தற்போது, 40 ஆண்டுகள் கழித்து, ரஜினியும் கமலும் சினிமாவில் இணைய உள்ளனர். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 



இந்தப் படம் முடிவடைந்ததும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ‘தில்லுமுல்லு’ படப்பாணியில் இந்த படத்தில் கமல் கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கான அறிவிப்பை மார்ச் 5ம் தேதி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அப்போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருக்கும் படம் உறுதியாகும். மார்ச் மாதமே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டதாகவும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத விபத்தால் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தின் மூலமாக, மறைந்த பாலச்சந்தர் குடும்பத்தினருக்கு உதவ, கமலும், ரஜினியும் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது ரஜினி நடித்து வரும், ‘அண்ணாத்த’ படம் இறுதி கட்டத்தில் உள்ளது. முழுநேர அரசியலுக்கு ரஜினி வரும்போது, ரஜினி, கமல் இணையும் படம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழக அரசியலில் ரஜினி, கமல் கூட்டணியும் உருவாக வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News