சினிமா
ராதாரவி

டப்பிங் யூனியன் தேர்தல் - ராதாரவி அணி வெற்றி

Published On 2020-02-17 08:55 GMT   |   Update On 2020-02-17 08:55 GMT
திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராதாரவியின் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.
திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தல் பிப்.,15 ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது.  மொத்தம் உள்ள 1360 உறுப்பினர்களில் 931 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். அதனை தொடர்ந்து மாலை 7.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை முடிந்து நேற்று வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டது. இதில் ராதாரவியின் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர். 

முன்னதாக தலைவர் பதவிக்கு ராதா ரவியும் பின்னணி பாடகி சின்மயியும் போட்டியிட்டனர். ஆனால், சின்மயியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராதா ரவி போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 



அப்போது அவர் கூறியதாவது: ’டப்பிங் யூனியன் தலைவராக போட்டியின்றி நான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். யூனியன் நலனுக்காக, பல நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன். பாடகரும், டப்பிங் யூனியன் கலைஞருமான பாடகி சின்மயி, மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும். 

எங்கள் மீது தவறான குற்றச்சாட்டைத் தெரிவித்ததால், சின்மயி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். சின்மயி விளம்பரப் பிரியராக இருக்கும் காரணத்தால், தொடர்ந்து அவதூறு பேசி வருகிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News