சினிமா
அன்புச்செழியன்

ஐடி ரெய்டு - சினிமா பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல்

Published On 2020-02-06 11:59 GMT   |   Update On 2020-02-06 11:59 GMT
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

நேற்று திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள், 'பிகில்' பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், சென்னை சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனையில் ஈடுபட்டனர். 



இன்று 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியனின் நண்பர் சரவணன் வீட்டிலிருந்து ரூ.17.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய், பிகில் படத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்து உள்ளது. நடிகர் விஜயின் வருமானம் குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் வாக்குமூலம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ. 77 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News