சினிமா
லோகேஷ் கனகராஜ் - ரஜினி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி?

Published On 2019-12-03 17:41 IST   |   Update On 2019-12-03 17:41:00 IST
விஜய்யை வைத்து ‘தளபதி 64’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திலேயே கவனம் பெற்றார். சமீபத்தில் இவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்தார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார். அப்போது, டெல்லியில் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பில் இருந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது, டெல்லி படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய பின்னர் ரஜினியின் பாராட்டுக்கு நேரில் நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ளார். இருவரும் நேற்று சந்தித்து பேசினார்கள். 



'விஸ்வாசம்' படத்தின்போது ரஜினியின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்க சந்தித்தார் இயக்குநர் சிவா. தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினி நடிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். 'தளபதி 64' படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News