சினிமா
கவுதம் மேனன் இயக்கத்தில் பிரசாந்த்
அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாகவும், அதனை கவுதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த இந்தி படமான 'அந்தாதுன்' திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது. இந்த படம் 'தி பியானோ டியூனர்' என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாகும்.
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் சென்ற ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் வென்றது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விரும்பியதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வலம்வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் தியாகராஜன், அனுபவமுள்ள முன்னணி இயக்குநர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் என தெரிவித்திருந்தார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.