சினிமா
சமந்தா

புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா

Published On 2019-07-01 11:41 IST   |   Update On 2019-07-01 11:41:00 IST
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது புதிய அவதாரம் எடுக்கும் முடிவில் இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் வெற்றி தோல்வியை சந்தித்து இருக்கிறேன். இப்போது தரமான கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற அக்கறை வந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். 10 வருடங்கள் தாண்டிய பிறகும் அதுபோல் ஆடல், பாடல், காதல் என்று நடித்துக்கொண்டு இருக்க முடியாது. 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைதான் தேர்வு செய்ய வேண்டும். சினிமாவில் கதை மிகவும் முக்கியம். மகாநதியைப்போல் ‘யூ டர்ன்’ எல்லா தரப்பு மக்களையும் சேரவில்லை. எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த கதைகளில் நடிக்க வேண்டும். நான் தற்போது நடித்து வரும் ‘ஓ பேபி’ கதை அதுமாதிரி இருக்கும். விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன்.



சமூகத்தில் பெண்கள் சமத்துவமாக வாழவேண்டும். வேலைக்கு செல்வதும், வீட்டில் இருப்பதும் அவர்கள் முடிவாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்க விரும்பும் பெண்ணை வேலைக்கு செல் என்றும், வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களை வீட்டில் இருந்து சமையல் செய் என்றும் கணவன்மார்கள் நிர்ப்பந்திக்க கூடாது.

சில கணவன்மார்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும், சமையல் செய்வதிலும் ஈடுபடுகிறார்கள். இது வரவேற்கத்தக்க மாற்றம்.” இவ்வாறு சமந்தா கூறினார்.

Similar News