சினிமா

சட்டமன்ற தேர்தலில் போட்டி - கஸ்தூரி

Published On 2019-04-24 14:18 GMT   |   Update On 2019-04-24 14:18 GMT
நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டியில், சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். #Kasthuri
கஸ்தூரி, சலங்கை துரை இயக்கத்தில் இ.பி.கோ 302 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி:

முதல் முறையாக போலீஸ் வேட அனுபவம்? 

நான் பல்வேறு வேடங்களில் நடித்து இருந்தாலும் போலீஸ் உடை அணிவது இதுதான் முதல் முறை. முதலில் சலங்கை துரை கதையை சொன்னபோது என் வேடம் சின்னதாக இருந்தது. 4 நாட்கள் தான் கால்ஷீட் கேட்டார்கள். பின்னர் எனக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் கதை மாற்றப்பட்டது. தொடர் கொலைகளை விசாரிக்கும் மர்மங்கள் நிறைந்த படம். துர்கா ஐபிஎஸ் என்ற துணிச்சலான போலீஸ் அதிகாரியாக வருகிறேன். 

தொடர்ந்து அதிரடியான கருத்துகளை கூறி வருகிறீர்கள். அரசியலுக்கு வருவீர்களா?

என்னை பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நிறைய கட்சிகள் அழைப்பு விடுத்தன. கட்சி சார்ந்த அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை. சமீபகாலங்களில் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசியலுக்கு வந்ததாகவோ அல்லது அரசியலில் இருப்பவர்கள் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவோ என் கண்ணுக்கு அகப்படவில்லை. அரசியலை பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கே இந்த தேர்தல் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. நான் களம் இறங்கி இருக்கலாமோ என்று எண்ண தோன்றியது. எனக்கு பிரபலம், பின்புலம், மக்கள் சேவை அனுபவம் என சில தகுதிகள் இருக்கின்றன. நான் உள்ளே நுழைந்தால் நிறைய நல்லவர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உண்டு.



சில கட்சிகளில் இணைந்ததாக செய்தி வந்ததே?

சினிமாவில் நடித்தபோது என்னுடன் நடித்த நடிகர்களுடன் இணைத்து பேசினார்கள். இப்போது அரசியல் கருத்துகளை கூறும்போது யாரை விமர்சிக்கிறேனோ அவர்களுக்கு எதிர்க் கட்சியில் இணைந்ததாக பரப்புகிறார்கள். கொட்டாங்கச்சி, என் ஆசை தங்கச்சி தவிர மற்ற எல்லா கட்சிகளிலும் என்னை சேர்த்துவிட்டார்கள்.

சுயேச்சையாக போட்டியிடுவீர்களா?

சுயேச்சையாக நிற்கும் அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை. சுயேச்சையை மதித்து ஓட்டு போடும் அளவுக்கு தமிழக மக்கள் இன்னும் மாறவில்லை. எனவே தனித்தோ சுயேச்சையாகவோ களம் இறங்க மாட்டேன்.
Tags:    

Similar News