சினிமா

டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கிய உத்தரவுக்கு தடை - ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Published On 2019-03-16 13:03 GMT   |   Update On 2019-03-16 13:03 GMT
டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. #Chinmayi #DubbingUnion
சினிமா பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தினார். சர்வதேச அளவில் பிரபலமான மீடூ இயக்கம் மூலம் சமூக வலைதளங்களில் புகார் கூறியவர் பின்னர் போலீசிலும் புகார் அளித்தார்.

சின்மயி தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். பாலியல் புகாருக்கு பிறகு அவருக்கும், சங்க தலைவர் ராதாரவிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

சங்க விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சின்மயி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சின்மயி தரப்பில் சென்னை 2-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கு நீதிபதி எஸ்.முருகேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது 2006-ம் ஆண்டிலேயே நுழைவு கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணங்களை செலுத்திவிட்டதாகவும், 2018-ம் ஆண்டு உறுப்பினர் பட்டியலில் தன் பெயர் இருப்பதாகவும் கூறி சின்மயி தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தன் விளக்கத்தைக் கேட்காமல் சங்கத்தில் இருந்து நீக்கியதாகவும் சின்மயி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சின்மயியை சங்கத்தில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக மார்ச் 25-ந் தேதிக்குள் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார். #Chinmayi #DubbingUnion #RadhaRavi

Tags:    

Similar News