சினிமா

கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு

Published On 2018-08-14 09:34 GMT   |   Update On 2018-08-14 09:34 GMT
ஈரோடு புத்தக திருவிழாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், அரசியல் தலைவர் ஒருவர் தன்னை அவரது கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக கூறினார். #Parthiban
ஈரோடு புத்தக திருவிழாவில் நேற்று மாலை நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு ‘‘சினிமாயணம்’’ என்ற தலைப்பில் பேசினார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆரம்பத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் தந்தை போஸ்ட் மேன் ஆக இருந்தார். அவரது வருமானத்தில் தான் வாழ்ந்தோம். என் அம்மா ரொம்ப கண்டிப்பானவர்.

‘‘அம்மா’’ என்றாலே கண்டிப்பானவர் தானே...? மேலும் சின்னம்மாவும் எனக்கு உண்டு. சின்னம்மா எப்படிபட்டவர் என்றும் உங்களுக்கு தெரியும் (சிரித்து கொண்டார்). இப்படி அம்மா... சின்னம்மா கண்டிப்பில் நல்ல பிள்ளையாக வளர்ந்தேன். படித்தேன்.

என் உறவினர் ஒருவர் சினிமா கம்பெனிக்கு கார் ஓட்டி வந்தார். அவருடன் நான் ஷூட்டிங்கை பார்க்க போனேன். அப்போது நடிகர் நாகேஷ் நடித்த படம் எடுக்கப்பட்டது. இடைவேளை நேரத்தில் நாகேஷ் சேரில் உட்காருவார். அவருக்கு குடைபிடிப்பார்கள். விசிறி வீசுவார்கள். செம கவனிப்பு கவனித்தார்கள்.

இதையெல்லாம் பார்த்த எனக்கும் சினிமாவில் நுழைய ஆசை ஏற்பட்டது. நாடக கம்பெனியில் சேர்ந்தேன். எனக்கு போஸ்ட் மேன் (தபால்காரர்) வேடம் கிடைத்தது. என் அப்பாவும் தபால்காரர் தானே...? எப்படி பொருத்தமாக அமைந்திருந்ததை பாருங்கள். அதன் பிறகு எனது ஆசான் கே.பாக்யராஜிடம் சேர்ந்து அவருக்கு உதவியாளராக (துணை டைரக்டராக) பணிபுரிந்தேன். நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு நடிப்பதை விட டைரக்டர் ஆக தான் விருப்பம் அதிகம். ஆனால் பல படங்களில் நடித்து விட்டேன்.



மாவீரன் கிட்டு என்ற படத்தின் மூலம் எனக்கு தேசிய விருது கிடைத்தது. எந்த வித பதட்டமும் இல்லாமல் மேடை ஏறி விருது பெற்றேன். அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘‘ஹவுஸ் புல்’’ படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்தது. அப்போது தான் தேசிய விருதின் அருமை எனக்கு தெரிந்தது. இந்த விருதை பெற மீண்டும் 10 வரு‌ஷம் க‌ஷடப்பட வேண்டியதிருந்தது.

இப்போது என்னிடம் 60 கதைகள் உள்ளது. இவற்றை எல்லாம் படம் எடுக்கு 600 கோடி வேண்டும். இதற்கு நான் எங்கே போவேன்? அதே சமயம் இன்னொரு வி‌ஷயத்தையும் இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன்.

முன்பு கலைஞரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கைது செய்த போது இதை கண்டித்து நான் பேட்டி கொடுத்தேன். இதை கேட்டு ஜெயலலிதா சிவகுமார் சாரிடம் பார்த்திபன் கூறியதை கேட்டீர்களா? என்று கேட்டு வருத்தப்பட்டாராம்.

இப்போது ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லையே... என்று ஆதங்கம் எனக்கு. காமராஜரை போல... ஒரு கக்கனை போல இனி வருவது கஷ்டம்.

இவ்வாறு நடிகர் பார்த்திபன் பேசினார். #Parthiban
Tags:    

Similar News