சினிமா

அரசியல் அழைப்பு: கமல்ஹாசனுக்கு நடிகர் விஜய் நன்றி

Published On 2018-07-02 06:10 GMT   |   Update On 2018-07-02 06:10 GMT
விஜய்யை அரசியல் களத்திற்கு அழைப்பதாக ட்விட்டரில் கூறிய கமல்ஹாசனுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KamalHaasan #Vijay #VijayPolitics
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக டுவிட்டர் மூலம் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?’ என்கிற கேள்விக்கு பதில் அளித்த கமல் ’எனது அனைத்துத் தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்தமான தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறினார்.

இது அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செல்போன் குறுந்தகவல் மூலமாகவும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய் ‘தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாராம்.

கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக அரசியலில் விஜய் களமிறங்குவார் என ஒரு யூகம் கிளம்பியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் வருகைக்கு அடித்தளம் போட்டார் விஜய். ஆனால் சில அரசியல் நிர்ப்பந்தங்களால் அவர் நடிக்கும் படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த முடிவை தள்ளிவைத்தார்.



கடந்த ஆண்டு வெளியான மெர்சல் படத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதுபற்றி கூறும்போது, அந்த வசனம் சர்ச்சையாகும் என்று தெரிந்தே பேசியதாக குறிப்பிட்டார்.

அவர் நடித்துக் கொண்டிருக்கும் சர்கார் படத்திலும் நடப்பு அரசியலை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ள விஜய் கிடைக்கும் வரவேற்பை வைத்து அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என காத்திருக்கிறார்.

இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவை பெற விஜய்யை தன் பக்கம் இழுக்க கமல் முயற்சிக்கிறாரோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதன்மூலம் அரசியலில் கமலும், விஜய்யும் இணைந்து பயணிப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #KamalHaasan #Vijay #VijayPolitics

Tags:    

Similar News