சினிமா

முடிவுக்கு வருகிறது இம்சை அரசன் பிரச்சனை - புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம்?

Published On 2018-06-24 10:24 GMT   |   Update On 2018-06-25 04:42 GMT
இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #IA24P #ImsaiArasan
ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்.

இந்த படத்துக்காக சென்னை அருகே சுமார் ரூ.7 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது புகார் கூறப்பட்டன. சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார்.

இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார். நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. 



பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இறுதி முடிவில் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது. 

இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #ImsaiArasan #Vadivelu
Tags:    

Similar News