சினிமா

மடியில் கனம் இல்லை, யாருக்கும் பயப்படமாட்டேன் - நடிகர் விஷால் ஆவேசம்

Published On 2018-05-15 08:00 GMT   |   Update On 2018-05-15 08:00 GMT
தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு செய்துள்ளதாக விஷால் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ‘மடியில் கனம் இல்லை; யாருக்கும் பயப்படமாட்டேன்’ என்று நடிகர் விஷால் ஆவேசமாக கூறியுள்ளார். #Vishal #ProducerCouncil
நடிகர் சங்கம் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷால் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- இணைய வழி குற்றங்களை அலசுகிறது உங்கள் படம். உங்களுக்கு அப்படி ஏதும் அனுபவம் நேர்ந்ததா?

பதில்:- ஆமாம். ஒருமுறை வெளிநாட்டில் இருந்தபோது எனது வங்கிக்கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது. என்னால் அதனை மீட்கவே முடியவில்லை.

ஒரே ஒரு முறை தவறான ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் மொத்த பணத்தையே இழக்கும் சூழ்நிலை இன்று நிலவுகிறது. சமூக வலைதளங்களில் நாம் பகிரும் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் கூட நமக்கு பெரிய ஆபத்தை விளைவிப்பவைதான். முக்கியமாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கே:- தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச்செயலாளர், நடிகர், தயாரிப்பாளர் எப்படி முடிகிறது இத்தனை பொறுப்புகளை கவனித்துக் கொள்ள?

ப:- நேர மேலாண்மை தான் காரணம். ஆறு மணி நேரம் மட்டும்தான் தூக்கத்துக்கு ஒதுக்குகிறேன். மீதி 18 மணி நேரத்தை ஒவ்வொரு வேலைக்கும் பிரித்துக் கொள்கிறேன். ஒரு வேலையில் இருக்கும்போது இன்னொரு வேலை பற்றி நினைக்கவே மாட்டேன். இத்தனையையும் நான் கவனிப்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான பிறகு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கவே முடியவில்லை. பரவாயில்லை. ஒரு நல்ல செயலுக்காக நமது சந்தோ‌ஷத்தை இழப்பதில் தவறு இல்லை.



கே:- சண்டக்கோழி 2 படம் எப்படி வந்திருக்கிறது?

ப:- முந்தைய படத்தை விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். சங்கத்திலும் அனுமதி கேட்க இருக்கிறோம்.

கே:- உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை?

ப:- ஒவ்வொரு ஆண்டும் படம் இயக்க திட்டமிடுகிறேன். ஆனால் முடியாமல் போகிறது. இந்த ஆண்டு நடிகர் சங்க கட்டிட வேலையை முதலில் முடிக்க வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை.

கே:- லைக்காவுடன் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்று ஒரு கட்டுரை வந்திருக்கிறதே...?

ப:- இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. அந்த இணையதளம் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டவேண்டும். நான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பதால் எனது படங்களை யாருமே தயாரிக்க கூடாதா? அல்லது எனது படங்களுக்கு நிதி உதவியே செய்யக்கூடாதா? கேரள காவல்துறையினர் தமிழ்ராக்கர்ஸ் அட்மினை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். பைரசி இணையதளங்களுக்கு படங்கள் செல்லும் வழிகளை அடைத்து வருகிறோம்.



கே:- வெளியீட்டில் உங்கள் படத்துக்கு முன்னுரிமை கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறதே?

ப:- சென்சார் செய்யப்பட்ட தேதியை வைத்து தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மற்ற தயாரிப்பாளர்களை கேட்டு பாருங்கள். என் படத்துக்கு எந்த முன்னுரிமையும் தரப்படவில்லை. யார் வேண்டுமானாலும் வந்து உறுதி செய்து கொள்ளலாம்.

கே:- உங்கள் மீதான ரூ.7 கோடி முறைகேடு புகார் குறித்து பதில் என்ன?

ப:- எனது தனிப்பட்ட கணக்கு வழக்குகளோ, சங்கம் தொடர்பானதோ எல்லாம் சரியாக முறையாக பராமரிக்கப்பட்டுவருகிறது. எனது மடியில் கனமில்லை. எனவே யாருக்காகவும் எந்த குற்றசாட்டுக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Vishal #ProducerCouncil
Tags:    

Similar News