சினிமா

விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து : விஜய் சேதுபதி

Published On 2017-08-31 14:16 GMT   |   Update On 2017-08-31 14:16 GMT
படத்தின் விமர்சனம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கருப்பன்’. இதில் இவருக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் பன்னீர் செல்வம் பேசும்போது,

‘நான் பஸ்ஸூக்காக காத்திருந்து காத்திருந்து தளர்ந்து போன நேரத்தில் எனக்கு ஏசி பஸ்ஸே கிடைத்திருக்கிறது. டிரைவராக விஜய் சேதுபதியும், கண்டக்டராக ரத்னம் சாரும் வந்து அமைந்தது என் பாக்கியம்.

சீனு ராமசாமி என்னை அழைத்து விஜய் சேதுபதியை சந்திக்க சொன்னார். விஜய் சேதுபதி இருக்கிற பிஸியில் கதை கேட்க முடியவில்லை. பல பேரின் உதவியால் இந்த படம் எனக்கு கிடைத்தது. விஜய் சேதுபதியின் மேனேஜர் ராஜேஷ், இயக்குனர் ரத்தினசிவா, தயாரிப்பாளர் காமன்மேன் கணேஷ், ஸ்ரீதர் என இந்த படம் அமைய காரணமாய் இருந்த அனைவருக்கும் நன்றி. இரண்டு படம் இயக்கிய எனக்கே இந்த நிலை என்றால் முதல் படம் இயக்க காத்திருக்கும் உதவி இயக்குனர்களின் நிலை ரொம்பவே கொடுமையானது.

இந்த படத்தின் போது விஜய் சேதுபதியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். தூங்கும் போது கூட படத்தை பற்றிய சிந்தனையில் தான் இருப்பார். ஜல்லிக்கட்டுக்கு முன்பே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பற்றி எதையும் படத்தில் பேசவில்லை என்றார்.


விஜய்சேதுபதி பேசும்போது, ‘ரேணிகுண்டா படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தை கூட மிகவும் கண்ணியமாக காட்டியிருப்பார் இயக்குனர் பன்னீர் செல்வம். துளி கூட கவர்ச்சி இருக்காது. இந்த படத்தில் கூட ஒரு முதலிரவு பாடல் மிகவும் கண்ணியமாக படம் பிடித்துள்ளார். நான் பழகியதில் இது நாள் வரை ஒருவரை பற்றி கூட பன்னீர் செல்வம் குறை சொன்னதில்லை. அவ்வளவு நல்ல மனிதர். ஒரு கமர்சியல் படத்தை எப்படி எடுத்து செல்வது என்ற வித்தையை அறிந்தவர் ஏ.எம்.ரத்னம். இந்த படத்துக்கு ரெகுலர் வில்லன் தேவையில்லை, ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்த போது, பாபி சிம்ஹாவிடம் சொன்னேன். அவனும் என் நண்பன் என்பதால் எதுவும் கேட்காமல் நடித்தான்.

சங்குத்தேவன் படம் டிராப் ஆனது எனக்கு பெரும் வருத்தம். அந்த மாதிரி மீசை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தற்செயலாக அதே இடத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி  படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் நிஜமாகவே மாடு பிடிக்கவில்லை. நிஜமான மாடுபிடி வீரர்களின் காட்சிகளோடு அழகாக மேட்ச் செய்து சிறப்பாக எடுத்துள்ளார் ராஜசேகர் மாஸ்டர். என் கருத்தை எந்த இயக்குனரிடம் நான்  திணிப்பதில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சூழல் இருக்கும்.  அதனால் அவர்கள் இயக்குனரிடம் கதை கேட்காமல் போயிருக்கலாம். அதை நாம் குறையாக சொல்ல முடியாது.

விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது என அனுபவப்பூர்வமாக பேசினார் நாயகன் விஜய் சேதுபதி.
Tags:    

Similar News