சினிமா

மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆனந்தராஜ் பேட்டி

Published On 2017-05-08 03:25 GMT   |   Update On 2017-05-08 03:25 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஆனந்தராஜ் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு வாங்கி கொடுத்து இருப்பார். தமிழக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1,570 கோப்புகளில் கையெழுத்து இட்டதாக கூறப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். என்ன திட்டம் என்று தெரியாமலேயே காட்டுகிற இடத்தில் எல்லாம் கையெழுத்து போடுகிற இடத்தில் அவர் இருக்கிறார் என நம்புகிறேன்.



எந்த கோப்புகளில் கையெழுத்து போட்டார் என்பதை மக்களுக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வளவு வேகமாக கையெழுத்து போட வேண்டிய அவசியம் என்ன? திட்டங்கள் நடக்கிறதோ இல்லையோ நிதி ஒதுக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கும் ஆட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுக்கு நிதியை பங்கீட்டு கொள்வதற்காக கோப்புகள் விரைவாக கையெழுத்திட்டு அனுப்பப்படுவதாக தகவல்கள் கிடைத்து இருக்கிறது.

இவ்வளவு வேகமாக கையெழுத்து போடும் அவர் இன்னும் 2 கையெழுத்து போட வேண்டும். முதல் கையெழுத்து 3 அல்லது 6 மாதத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை ஒழிப்போம் என்கிற கையெழுத்து. இரண்டாவதாக, கடல்நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்தும் நீராக மாற்றுவதற்கான கையெழுத்தை போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News