சினிமா
மரோசரித்ரா

பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "மரோசரித்ரா'' அற்புத சாதனை

Published On 2021-01-25 22:17 GMT   |   Update On 2021-01-25 22:17 GMT
பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.

"மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.

"அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!

படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவில்லை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.

ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.

இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

அவர்கள் எண்ணியது போலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.

பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.

பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''

பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''

கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.

அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.

இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!

பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.

"மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.

இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.

"மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.

"மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

"மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.

வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.

வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.

"ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.

அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.

கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.

சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News