சினிமா
கோப்புப்படம்

ஸ்ரீதரின் அழகே உன்னை ஆராதிக்கிறேன் மும்மொழிப் படத்தின் கதாநாயகி லதா

Published On 2021-01-11 21:51 GMT   |   Update On 2021-01-11 21:51 GMT
டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.
டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.

டைரக்டர் ஸ்ரீதரின் "உரிமைக்குரல்'' படத்தில் எம்.ஜி.ஆரும், லதாவும் நடித்தார்கள். ஸ்ரீதர் மீண்டும் தனது "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தில் நடிக்க லதாவை அழைத்தார். ஒரு இளம் பெண்ணின் மன உணர்வுகளை படம் பிடித்த அந்த கதைக்கு `அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்று கவித்துவமான பெயரை சூட்டினார்.

இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படமானது.

இந்த மும்மொழிப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

"உரிமைக்குரல்'' படத்தில் நடித்தபோதே ஸ்ரீதரின் அற்புதமான இயக்கும் திறமையை என்னால் உணர முடிந்தது. மறுபடியும் இவரது படத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளூர இருந்தது. நடிகர் சிவகுமாருடன் "கண்ணாமூச்சி'' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்ரீதரிடம் இருந்து அழைப்பு.

"அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' என்று ஒரு படம் எடுக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் தயார் ஆகிறது. மூன்று மொழிகளுக்கும் நீங்கள்தான் கதாநாயகி'' என்றார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.

தமிழில் விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் என்னுடன் நடித்தார்கள். தெலுங்கில் சரத்பாபு, முரளி மோகன். கன்னடத்தில் ஸ்ரீநாத் நடித்தார். மூன்று மொழி கதாநாயகர்களுடனும் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

எனக்கு தெலுங்கு சரளமாக பேச வரும். கன்னட வசனங்களை மட்டும் தமிழில் எழுதி வைத்து பேசினேன்.

தமிழில் வெள்ளி விழா கொண்டாடிய இந்தப்படம், மற்ற 2 மொழிகளிலும் 100 நாட்கள் ஓடியது. இந்தப் படத்துக்கு பிறகு சிறிது இடைவெளிவிட்டு, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடித்த "மீனவ நண்பன்'' படத்திலும் நடித்தேன். உணர்வுபூர்வமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நின்றவர் டைரக்டர் ஸ்ரீதர்.''

இவ்வாறு லதா கூறினார்.

இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற "சஞ்சீர்'' படத்தை, தமிழிலும், தெலுங்கிலும் எடுத்தார்கள். தமிழில் எம்.ஜி.ஆர் - லதா நடிக்க "சிரித்து வாழவேண்டும்'' என்ற பெயரில் தயாரானது. தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவ் - லதா நடித்தனர்.

இரண்டு படங்களும் எஸ்.எஸ்.பாலன் டைரக்ஷனில் தயாராயின.

இந்தப் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

"இரண்டு மொழிகளிலும் நான்தான் கதாநாயகி. இரண்டு படத்தின் சீன்களுமே அடுத்தடுத்து எடுக்கப்படும். தமிழ்ப்படம் என்றால், "தமிழ் ïனிட்டெல்லாம் வாங்க'' என்று அழைப்பார்கள். தெலுங்கு படப்பிடிப்பு என்றால், தெலுங்கு ïனிட்டை தயாராக இருக்கச் சொல்லி அறிவிப்பார்கள்.''

இரண்டிலும் நான் இருப்பேன்.

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சி. பள்ளிக் குழந்தைகள் 20 பேரை வில்லன் கூட்டம் கொன்றுவிடும். கொலையாளி யார் என்பது எனக்கு மட்டும் தெரியும்.

ரோட்டில் நின்றபடி சாணை பிடிக்கிற கேரக்டரில் நான் நடித்தேன். கொலையாளி யாரென்று தெரிந்த நிலையிலும், பயம் காரணமாக வெளியே சொல்லாமல் மவுனமாகிவிடுவேன்.

உண்மை எனக்குத் தெரிந்தும் சொல்லாமல் இருக்கிறேன் என்பது, ஹீரோவுக்கு தெரிந்து விடும். அதன் பிறகு என்னை சந்திக்கிற ஹீரோ (எம்.ஜி.ஆர்) நேராக குழந்தைகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மார்ச்சுவரிக்கு இழுத்துப் போவார். உயிரிழந்த அந்த குழந்தைகளை காட்டி, "நல்லாப்பாரு! சாக வேண்டிய வயசா இவங்களுக்கு? இவங்கள்ல எத்தனை பேர் காமராஜர், அண்ணாவா வந்திருப்பாங்களோ? இந்தப் பிஞ்சுகளை கருக்கின பாவி பற்றி தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன்னைவிட சுயநலவாதி யாருமில்லை'' என்கிற மாதிரி உணர்ச்சி பொங்க

பேசுவார்.இந்த வசனத்தைப் பேசுவதற்கு முன் என்னை மார்ச்சுவரி அறை வரை கையை பிடித்து இழுத்துச் செல்லும் எம்.ஜி.ஆர்., உள்ளே என்னைப் பிடித்திருக்கும் கையை உதறிவிட்டு இப்படி பேசுவார். நான் அவர் சொல்வதை கேட்டு மனம் மாறுவது போல் காட்சி.

மறுநாள் இதையே தெலுங்கில் எடுத்தார்கள். காட்சி படமாக்கப்பட்டபோது, கதாநாயகன் என்.டி.ராமராவ் வேகவேகமாக என் கையை பற்றிக்கொண்டு மார்ச்சுவரிக்கு இழுத்துப்போனார். அப்போதே அவர் அந்த கேரக்டருக்குள் `இன்வால்வ்' ஆகிவிட்டது தெரிந்தது.

நேராக மார்ச்சுவரி அறையை அடைந்தவர், பிடித்துக் கொண்டிருந்த என் கையை உதறிவிட்டு குழந்தைகளைப் பார்த்து வசனம் பேசவேண்டும். ஆனால், என் கையை உதறுவதாக நினைத்துக் கொண்டு, வேகமாக தள்ளிவிட்டார். நான் கீழே விழுந்து விட்டேன்.

ஆனால், உணர்ச்சிமயமாக நடிப்பில் மூழ்கிவிட்ட ராமராவ் அதை கவனிக்கவில்லை. உயிரற்ற குழந்தைகளைப் பார்த்து ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே போனார். வசனத்தை அவர் பேசி நிறுத்திய பிறகுதான், என்னை அவர் உதறிய வேகத்தில் நான் விழுந்ததை புரிந்து அதிர்ந்து போனார். என்னிடம் வருத்தம் தெரிவித்தார். பெரிய நடிகராக இருந்தும் அவர் வருத்தம் தெரிவித்தது என்னை நெகிழச் செய்தது. "அதெல்லாம் ஒன்றுமில்லை'' என்று கூறி அவரது வருத்தத்தை சரி செய்தேன்.

தெலுங்குப் படப்பிடிப்புக்கு போனால் என்னைப் பார்த்த மாத்திரத்தில், "லதா காரு! பிரதர் நல்லாயிருக்காரா?'' என்று கேட்பார். அவர் `பிரதர்' என்று சொல்வது எம்.ஜி.ஆரை. இருவரிடமும் அப்படியொரு சகோதர பாசம் இருந்தது.

தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் நான் நடித்த "அந்தால ராமுடு'' நன்றாக ஓடியது. "உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெற்று நடித்த படம் இது.

அதுமாதிரி `காந்தி புட்டின தேசம்' படத்தில் கிருஷ்ணம ராஜ×வுடன் சேர்ந்து நடித்தேன். இப்படத்தில் நடித்ததற்காக, ஆந்திர அரசின் விருது எனக்குக் கிடைத்தது.''

இவ்வாறு லதா கூறினார்.
Tags:    

Similar News