சினிமா
விஜயகுமார்

தேவர் படத்தில் காளைகளுடன் மோதிய விஜயகுமார்

Published On 2020-12-01 02:23 GMT   |   Update On 2020-12-01 02:23 GMT
மிருகங்களை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துக் குவித்தவர், சாண்டோ சின்னப்பத்தேவர். அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட "தாயில்லாக் குழந்தை'' படத்தில் நிஜமாகவே முரட்டுக்காளைகளுடன் மோதினார், விஜயகுமார்.
மிருகங்களை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துக் குவித்தவர், சாண்டோ சின்னப்பத்தேவர். அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட "தாயில்லாக் குழந்தை'' படத்தில் நிஜமாகவே முரட்டுக்காளைகளுடன் மோதினார், விஜயகுமார்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த காளைச் சண்டையில் உயிரைப் பணயம் வைத்து காளைகளை அடக்கினார்.

இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

"சிங்கம், புலி, கரடி, யானை போன்ற மிருகங்களை வைத்து மட்டுமல்ல, சாதுவான ஆட்டைக்கூட வைத்துக்கூட படம்  எடுத்தவர் சின்னப்பத் தேவர். இந்தப் பின்னணியில் அமைந்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களே.

இவரது "தாயில்லாக் குழந்தை'' படத்தில் என்னை ஹீரோவாக `புக்' பண்ணும்போதே, "விஜயகுமார்! நீங்க பெரிய வீரர்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்துல 2 காளை மாடுகளோட நீங்க மோத வேண்டியிருக்கும். அதுக்கு இப்பவே உங்களை தயார்படுத்திக்குங்க, என்றார்.

நான் கிராமத்தில் வளர்ந்தவன். எனவே, தேவர் இப்படிச்சொன்னபோது எனக்குள் ஒரு துளி பயம் கூட ஏற்படவில்லை.

"தாயில்லாக் குழந்தை'' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில்தான், காளைகளை அடக்கும் காட்சியை படமாக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். 2 காளைகள் வந்தன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகளைப்போல திடகாத்திரமாக, பெரிய திமிலுடன் பார்க்கவே கம்பீரத்துடன் காணப்பட்டன.

காளையுடன் நான் மோதுகிற இடத்தைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது.

முதலில் ஒரு மாட்டுடன் மோதவேண்டும். அந்த மாடும் வந்தது. நான் நின்றிருந்த பகுதியில் விடப்பட்டது. என்னிடம் வந்த தேவர், "விஜயகுமார்! 2 இடத்தில் 2 கேமரா இருக்கு. டைரக்டர் சொன்னதும் கேமரா  ஓடத்தொடங்கும்.  `நீயா... மாடா...'ன்னு பார்த்துக்க'' என்றார், தேவர்.

ஏற்கனவே கிராமத்து காளைகளுடன் கொஞ்சம் விளையாடிய அனுபவம் இருந்ததால், கேமரா ஓடத்தொடங்கியதும் நான் எந்தவித பதட்டமும் இல்லாமல் காளையை நெருங்கினேன்.

என்னிடம் பிடிகொடுக்காத அந்த காளை, ஒரு கட்டத்தில் நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில் தனது கொம்பால் எனது தொடையில் குத்தித் தள்ளியது. தொடையில் இருந்து ரத்தம் வரத்தொடங்க, காளையை அடக்கியே தீரவேண்டிய வேகம் எனக்குள். இப்போது இந்த வீரத்தை அதிகப்படுத்துவது போல, "விஜயகுமார்! விடாதே! காளையை அடக்கு'' என்று கத்தினார், தேவர்.

தேவரின் அந்த வார்த்தைக்கும் பலம் இருந்திருக்க வேண்டும். ரத்தம் சொட்டச்சொட்ட, காளையின் கொம்பை பிடித்த நான், அடுத்த சில நிமிட போராட்டத்தில் அந்தக் காளையை மண்டியிட வைத்தேன். அன்று மதியமே இன்னொரு மாட்டையும் அடக்கியாக வேண்டும். ஏற்கனவே ஒரு வீரக்காளையை அடக்க முடிந்த தெம்புடன் இதை அணுகியதால் மிக சுலபமாய் அந்தக் காளையையும் மடக்கிவிட்டேன்.

பொதுமக்கள் ஆரவாரம் செய்தார்கள். விசில், கரகோஷ சத்தம் காதைத் துளைத்தது.

காளைகளை அடக்கும் காட்சி முடிந்ததும் சந்தோஷ மிகுதியால் ஓடிவந்து என்னை ஆரத் தழுவிக் கொண்டு வாழ்த்து சொன்னார், தேவர். "நான் எதிர்பார்த்ததை விடவும் காட்சி நல்லா வந்திருக்கு'' என்றார்.

சில நாட்களில் வாகினி ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவர், படத்தில் நான் வீரத்துடன் காளைகளுடன் மோதியதை சொன்னார். அதோடு நில்லாமல், "எனக்குத் தெரிந்து சண்டைக் காட்சியில் `டூப்' போடாமல் செய்பவர்கள் இரண்டே இரண்டு நடிகர்கள்தான். வடநாட்டில் தர்மேந்திரா, தென்னாட்டில் விஜயகுமார்'' என்றார். தேவரின் இந்த வெளிப்படையான பாராட்டில் காளை குத்தியதில் ஏற்பட்டிருந்த வலி கூட மறந்து போயிற்று.''

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

"குற்றப்பத்திரிகை'' படத்தில் நடித்த நேரத்தில் பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பியிருக்கிறார், விஜயகுமார். இந்த விபத்தில்

4 நாட்கள் `கோமா' நிலையில் இருந்து கண் விழித்திருக்கிறார்.

அதுபற்றி அவர் கூறுகிறார்:-

"டைரக்டர் ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகை படத்தில் எனக்கும் முக்கிய கேரக்டர். அப்போதிருந்த அரசியல் பின்னணியில் பரபரப்பான படமாக எதிர்பார்க்கப்பட்டது அந்தப்படம். என் சம்பந்தப்பட்ட காட்சிகளை தர்மபுரியில் படமாக்கினார்கள்.

என் இளைய மகள் ஸ்ரீதேவிக்கு அப்போது 5 வயது இருக்கும். சினிமா படப்பிடிப்புக்கு நான் எப்போது புறப்பட்டாலும், "அப்பா! காரில் இரவுப் பயணம் மட்டும் செல்ல வேண்டாம்'' என்று கூறுவாள். அப்பா மீதான அதிகபட்ச பாசமாக அதை எடுத்துக் கொள்வேன்.

தர்மபுரியில் முடிந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து கோபிசெட்டிப்பாளையம் போக வேண்டியிருந்தது. மறுநாள் அங்கே படப்பிடிப்பு. இரவு படப்பிடிப்பு முடிந்து 11 மணிக்குத்தான் கார் வந்தது. எனக்கு அப்போது மகள் ஸ்ரீதேவியின் `ராத்திரி கார் பயணம் வேண்டாம்' என்ற வார்த்தைகள் காதுக்குள் வந்து போயின.

ஆனாலும் கம்பெனியின் அவசரம் கருதி காரில் புறப்பட்டு விட்டேன். கார் வேலூரில் இருந்து புறப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் போய்க் கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டி 2 மணி அளவில் நான் கொஞ்சம் கண்ணயர்ந்த நேரம் கார் எதிரில் வந்த லாரி மீது மோதி, மூன்று குட்டிக்கரணம் அடித்தது. காரில் இருந்து நான் தூக்கியெறியப்பட்டது தெரிந்தது. மரணத்தை ருசிபார்க்க நேர்ந்த அனுபவமும் அப்போது

கிடைத்தது.என் இதயத்துடிப்பு படிப்படியாக குறைவது எனக்குத் தெரிகிறது. `நோ' என்று அலறுகிறேன். மறுபடி துடிப்பு ஏறுகிறது.

மீண்டும் இறங்கத் தொடங்கும்போது `நோ' என்று அலறுவேன். இப்படி ஜீவ மரணப் போராட்டத்திலும் மகள் ஸ்ரீதேவி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போகின்றன...

அப்புறம் என்ன நடந்தது என்று தெரியாது. பெங்களூரில் உள்ள மணிபால் ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் கழித்து கண் விழித்தேன். விலா எலும்புகள் உடைந்திருந்தன என்றார்கள். தொடையின் ஒரு பக்கம் கிழிந்து தையல் போட்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் என்னைப் பார்த்தவர்கள் `மறுபிறவி' என்றார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு நான் காரில் இரவுப் பயணத்தை அது எத்தனை அவசரமானாலும் மேற்கொள்வதில்லை.

இந்த விபத்து சமயத்தில் டைரக்டர் பி.வாசுவின் வால்டர் வெற்றிவேல் படத்திலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் `ஆயிரம் பரா' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். "நான் குணமாகி வர மாதக் கணக்கில் ஆகலாம். எனவே, என் கேரக்டரில் வேறு நடிகரைப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அனுப்பியும், அவர்கள் எனக்காக காத்திருப்பதாக சொல்லி விட்டார்கள். நான் திருப்பிக் கொடுத்த அட்வான்சையும் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். நெகிழ்ந்து போனேன்.''
Tags:    

Similar News