சினிமா

ரகுமான் கதாநாயகனாக நடித்த "புதிய ராகம்'': ஜெயசித்ரா டைரக்டர் ஆனார்

Published On 2019-01-25 17:58 GMT   |   Update On 2019-01-25 17:58 GMT
நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த "பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.

ஜெயசித்ராவின் 100-வது படம் "நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.

பிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.

1988-ல், கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.

1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, "புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.

ஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.

ஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.

படங்களில் நடித்து வந்தபோது, "சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பின்னர் "சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.

இந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.

ஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது "பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.

"சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

"நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.

கால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

ரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் "தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.

முதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த "பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.

நான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.

தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.

படத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.

நல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.

என் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.

எல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''

இவ்வாறு ஜெயசித்ரா கூறினார். #tamilnews
Tags:    

Similar News