சினிமா

உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த லதா

Published On 2018-12-06 17:45 GMT   |   Update On 2018-12-06 17:45 GMT
எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.

"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் 3 கதாநாயகிகள். மஞ்சுளா, சந்திரகலா, லதா ஆகிய மூவரில் மஞ்சுளா எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரனில் அறிமுகம் ஆனவர். சந்திரகலா, சிவாஜி நடித்த "பிராப்தம்'' படத்தின் மூலம் பட உலகில் காலடி எடுத்து வைத்தார்.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லதா, "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்தது எப்படி?

லதாவே கூறுகிறார்:-

"என் தாயார் லீலாராணி, சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் கான்வென்டில் படித்தவர். என் தந்தை ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சுதேச சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, ஆட்சிப்பொறுப்பை மத்திய அரசே ஏற்றது. அந்தக் காலக்கட்டத்தில், ராஜாஜி மந்திரிசபையிலும், காமராஜர் மந்திரிசபையிலும் என் தந்தை அமைச்சர் பதவி வகித்தார்.

என் பெரியம்மா கமலா கோட்னீஸ், இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

எனக்கு ஒரு அக்கா; 3 தம்பிகள்; ஒரு தங்கை. என் அக்காவும், நானும் சென்னை ஹோலிகிராஸ் கான்வென்டில் படித்தோம்.

நான்கு வயதிலேயே, எனக்கு நடனம் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டில் ரேடியோவில் கேட்கும் பாட்டுக்கு நானாக ஆடுவேன். பெரியம்மா நடிகையாக இருந்ததால், நான் நடனம் ஆடுவதை அவர் உற்சாகப்படுத்தனார்.

பெரியம்மா அதோடு நின்று விடாமல், பிரபல நடனக் கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி நான் நடனம் கற்க ஏற்பாடு செய்தார். பெரியம்மா வீடு, அப்போது தி.நகரில் இருந்தது. அங்குதான் மாஸ்டர் வந்து எனக்கு நடனம் கற்றுத் தருவார்.

சினிமாவில் எனக்கு அப்போது பிடித்த ஒரே நடிகை பத்மினி. அவர் நடனம் என்றால் எனக்கு உயிர். பத்மினி நடித்த படம் பார்த்தால், அன்று முழுக்க படத்தில் அவர் ஆடியபடியே ஆட வீட்டில் முயன்று கொண்டிருப்பேன்.

என் அக்காவுக்கு நடனம் என்றால் ஆகாது. மாஸ்டரை பார்த்ததும் ஓட்டம் பிடித்து விடுவாள்!

நடனத்தில் தேர்ந்ததும், பள்ளி விழாக்களில் நடனம் ஆடத் தொடங்கினேன். நடனத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதல் பரிசை பெறும் மாணவியாக இருந்ததால், பள்ளியிலும் எனக்கு நல்ல பெயர். அந்த அளவுக்கு எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பேன்.

அக்கா எனக்கு நேர் எதிர். எந்த நேரமும் அரட்டைதான். இதனால் படிப்பில் பின்தங்கிப்போன அக்கா, தேர்வில் பெயிலாகி என் வகுப்பிலேயே வந்து சேர்ந்து கொண்டார். நான் முன் பெஞ்சில் அமைதியின் வடிவாகவும், அக்கா பின்பெஞ்சில் அரட்டைத் திலகமாகவும் அறியப்பட்டோம்.

அம்மா எங்களிடம் பாசம் காட்டிய அளவுக்கு கண்டிப்பாகவும் இருந்தார். பள்ளியில் எங்காவது சுற்றுலா அழைத்துச் சென்றால்கூட பாதுகாப்பு கருதி அம்மாவும் எங்களுடன் வந்திருக்கிறார்.

ஒருமுறை பள்ளியில் `ஹெர்குலிஸ்' என்ற ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றார்கள். படம்தானே என்று அம்மாவிடம் சொல்லவில்லை. எங்களைக் காணாமல் தேடித் தவித்த அம்மாவுக்கு, அப்புறம்தான் நாங்கள் பள்ளியில் இருந்து படம் பார்க்கப்போன விஷயம் தெரிந்திருக்கிறது. வீட்டுக்குப் போனதும் அம்மா அடி பின்னிவிட்டார். அம்மாவுக்கு தகவல் தெரிவிக்காமல் படம் பார்க்கப் போனதால் ஏற்பட்ட கோபம், அம்மாவை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டுபோய் விட்டது. எங்களை எப்படி கண்டிப்பாக வளர்த்திருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்ல

வந்தேன்.பத்தாவது படிக்கும்போது `கதக்' நடனமும் கற்றுக்கொண்டேன். கிருஷ்ணகுமார் மாஸ்டர்தான் கற்றுக்கொடுத்தார். நடனப் பள்ளியில் தேறியபோது, ராமராவ் கல்யாண மண்டபத்தில் நடனமாடினேன். பரதம், கதக்  ஆடியதோடு வெரைட்டியாக சில நடன வகைகளையும் ஆடிக்காட்டினேன்.

நடனம் சிறப்பாக நடந்து முடிந்தது. அத்தோடு அதை மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.

ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்தது. நான்தான் எடுத்துப் பேசினேன். எதிர் முனையில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பேசினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், "சினிமாவில் நடிப்பாயா?'' என்று கேட்டார்.

நான், `நடிப்பதாக இல்லை' என்று சொல்லி, போனை வைத்து விட்டேன்.

அப்போது எங்கள் வீடு அடையாறு போட் கிளப்பில் இருந்தது.

மறுநாள் மாலை நான் பள்ளிக்கு போய்விட்டு வீடு திரும்பியபோது, பிளைமவுத் காரில் வந்து இறங்கினார், மனோகர்.

வந்தவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அம்மாவிடம் "எம்.ஜி.ஆர். தனது படத்தில் உங்கள் மகளை அறிமுகப்படுத்த விரும்புகிறார்'' என்று சொன்னார். அம்மா முகத்தில் அதிர்ச்சி.
Tags:    

Similar News