சினிமா

கோவி.மணிசேகரன் இயக்கத்தில் தென்னங்கீற்று

Published On 2018-12-02 17:33 GMT   |   Update On 2018-12-02 17:33 GMT
கோவி.மணிசேகரன் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.
கோவி.மணிசேகரன் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.

"தென்னங்கீற்று'' கதையின் நாயகி பெயர் வசுமதி. இருபத்தெட்டு வயது வரை பூப்படையாத பெண் அவள்.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கோவி.மணிசேகரன் இந்த நாவலை எழுதியிருந்தார்.

தமிழ்ப் படத்துக்கு கதாநாயகியாக சுஜாதாவும், கதாநாயகனாக விஜயகுமாரும் ஒப்பந்தம் ஆனார்கள்.

கன்னடப்படத்துக்கு "நிரீக்ஷே'' (எதிர்பாராதது) என்று பெயரிடப்பட்டது. அப்போது கன்னடத்தில் மிகப்பிரபலமாக இருந்த கல்பனா, (கன்னட) மஞ்சுளா ஆகியோர் கன்னடப்படத்துக்கு ஒப்பந்தம் ஆனார்கள். தமிழில் இரண்டாவது கதாநாயகியாக (டாக்டர் வேடத்தில்) நடிக்கவும் கல்பனா சம்மதித்தார்.

கன்னடப் படவுலகில் நெம்பர் 1 இசை அமைப்பாளராக விளங்கிய ஜி.கே.வெங்கடேஷ், இரு படங்களுக்கு இசை அமைத்தார்.

பாலசந்தர் எச்சரிக்கை

"தென்னங்கீற்று'' படப்பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. மணிசேகரன் கேட்டுக்கொண்டதன் பேரில், கே.பாலசந்தர் இந்த படப்பூஜையில் கலந்து கொண்டு, கேமராவை முடுக்கி வைத்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் படத்தை இயக்கப் போகிறேன் என்று கோவி.மணிசேகரன் சொன்னதும், "என்ன கோவி! முதன் முதலாக டைரக்ட் செய்யப் போகிறீர்கள். எதற்கு இந்த விஷப்பரீட்சை?'' என்று கேட்டார்.

"ஒரு சோதனைதான்!'' என்றார், மணிசேகரன்.

"அதற்கில்லை. நானும் தென்னங்கீற்று நாவலைப் படித்திருக்கிறேன். படம் எடுக்க முடியுமா என்று பலநாள் யோசித்து, `முடியாது' என்று கைவிட்டேன். ஒரு பெண் பருவம் அடையவில்லை என்று, 13,000 அடி வரை எப்படி சொல்லப்போகிறீர்கள்? கத்தி மேல் நடப்பது போன்ற இந்தக் கதையை, ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரிக்கிறீர்கள். இது விஷப்பரீட்சை. ஜாக்கிரதையாக இருங்கள்'' என்று

எச்சரித்தார்.படப்பிடிப்பை, இரு மொழிகளிலும், ஏக காலத்தில் வேகமாக நடத்தி, குறிப்பிட்ட காலத்தில் முடித்தார், மணிசேகரன்.

படத்தை வாங்க, விநியோகஸ்தர்கள் ஈபோல் மொய்த்தனர். இரு மொழிகளிலும் பட அதிபருக்கு கொள்ளை லாபம்.

"தென்னங்கீற்று'' 4-7-1975-ல் ரிலீஸ் ஆயிற்று. அதே சமயத்தில் கன்னடப்படமும் கர்நாடகத்தில் வெளியாயிற்று.

கன்னடப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. தமிழ்ப்படம் 4 வாரம்தான்!

கதையின் மையக்கருத்தை பெண்கள் ஏற்காததால், தமிழ்ப்படம் பெண்களை கவரவில்லை. ஆனால், கர்நாடக ரசிகர்கள், புதுமையை ஏற்றுக்கொண்டார்கள்.

"தென்னங்கீற்று'' படத்தைப் பார்த்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், "இது விருதுக்கு உரிய படம். அனுப்பி வைக்கலாம்'' என்று யோசனை சொன்னார்.

அவர் கூறியபடியே, "தென்னங்கீற்று'' தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் சங்க விருதைப் பெற்றது. கன்னட "நிரீக்ஷே'', கர்நாடக அரசின் விருதைப் பெற்றது.

பட அதிபர் எங்கே?

பட அதிபர் பாபாதேசாய் புத்திசாலி. நிறைய லாபத்தை சம்பாதித்தவர், மீண்டும் படம் எடுப்பதில்லை என்று முடிவு செய்து, வேறு வியாபாரத்துக்கு போய்விட்டார்.

"தென்னங்கீற்று'' படம் தயாராகி முடிந்திருந்தபோது, அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் தர பல பட அதிபர்கள் கோவி.மணிசேகரன் வீட்டுக்கு படையெடுத்தனர். அவற்றை மணிசேகரன் ஏற்கவில்லை. "படம் வரட்டும்; பிறகு பார்ப்போம்'' என்று கூறிவிட்டார்.

படம் வெளிவந்து, சரிவர ஓடாததால், அந்தப் பட அதிபர்களில் ஒருவர்கூட மணிசேகரனைத் தேடி வரவில்லை. மூலைக்கு ஒருவராக ஓடி மறைந்துவிட்டனர்!

"இலக்கியத் துறையில் வெற்றி மேல் வெற்றி பெற்றோம். கலைத்துறையில் மட்டும் ஏனிந்த தோல்வி?'' என்று எண்ணி வருந்தினார், மணிசேகரன்.

`இனி திரைப்படத்துறையே வேண்டாம்' என்று தீர்மானித்து, மீண்டும் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். பாதியில் நின்றிருந்த "யாகசாலை'' என்ற நாவலை எழுதி முடித்தார்.

மனோரஞ்சிதம்

இந்த சமயத்தில், சிவகாசியில் காலண்டர் வியாபாரம் செய்து வந்த சிதம்பரம் என்ற தொழில் அதிபர், மணிசேகரனை

சந்தித்தார்."தென்னங்கீற்று'' படத்தால் ஈர்க்கப்பட்டவர் அவர்.

மணிசேகரனிடம் சிதம்பரம் சொன்னார்:

"மணிசேகரன் அய்யா! தென்னங்கீற்றில், வயதுக்கு வராத ஒரு பெண்ணை கதாநாயகியாகப் படைத்தது பெரிதல்ல. அவள் வயதுக்கு வந்து விட்டாள் என்பதை உணர்த்த, திரையில் ரத்தச் சிதறலைக் காட்டினீர்களே... ஆ! அது அற்புதம். அதில் மயங்கியே, உங்களை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்றார்.

மணிசேகரன், தனது "யாகசாலை'', "மனோரஞ்சிதம்'' ஆகிய கதைகளைச் சொன்னார். "மனோரஞ்சிதம்'' அவருக்குப் பிடித்துப்போயிற்று. அதை படமாக்குவதாகச் சொன்னார்.

பட வேலைகள் தொடங்கின. டைரக்டர் துரையால் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சுமித்ராதான் கதாநாயகி. விஜயகுமார் கதாநாயகன். மற்றும் எஸ்.வி.சுப்பையா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், புதுமுகம் எம்.எஸ்.வசந்தி, எம்.என்.ராஜம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தார், மணிசேகரன்.

"மனோரஞ்சிதம்'' படத்தொடக்க விழா அமர்க்களமாக நடந்தது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் மனோரஞ்சித மலர்

வழங்கப்பட்டது!("மனோரஞ்சிதம்'' சந்தித்த சோதனைகள் - நாளை)
Tags:    

Similar News