சினிமா

கை கொடுக்கும் கை பட கிளைமாக்ஸ்- டைரக்டர் மகேந்திரனுடன் விஜயகுமார் மோதல்

Published On 2018-11-25 18:15 GMT   |   Update On 2018-11-25 18:15 GMT
பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.
பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.

விஜயகுமார் ஏற்கனவே சிவாஜியை வைத்து "நெஞ்சங்கள்'' என்ற படத்தை தயாரித்தார். வசூல் ரீதியாக அந்தப்படம் வெற்றி பெறாததால், தொடர்ந்து படம் தயாரிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டார்.

ஆனால், பட அதிபர் ஜீவி கேட்டுக்கொண்டதால், "தயாரிப்பு மேற்பார்வை'' என்ற பொறுப்பை ஏற்க நேரிட்டது.

இதுகுறித்து விஜயகுமார் கூறியதாவது:-

"சொந்தப்படம் எடுத்த அனுபவம், எனக்கு நிச்சயம் புதிய அனுபவம். இனி தயாரிப்பே வேண்டாம் என்கிற அளவுக்கு இந்த தயாரிப்பு அனுபவம் என்னை பாதித்திருந்தது.

தொடர்ந்து 4 வருடம் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் ஜீவி என்னை அழைத்துப்பேசினார். "ஒரு கன்னடப்படம் வந்திருக்கிறது. வித்தியாசமான கதையமைப்புடன் நன்றாகவே இருக்கிறது. தமிழில் ரஜினியை வைத்து அதை தயாரிக்க இருக்கிறேன்'' என்றார்.

ரஜினி அப்போது சூப்பர் ஸ்டார் ஆகயிருந்த நேரம். அதோடு வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டிவந்தார். எனவே, ரஜினி அந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஜீவியிடம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

"உங்களுக்கு இந்தப் படத்தில் வேலை இருக்கிறது. தயாரிப்பாளராக நான் இருந்தாலும், நீங்கள்தான் முன்னிலை தயாரிப்பு மேற்பார்வை செய்யவேண்டும்'' என்றார், ஜீவி.

அவர் அப்படிச் சொன்ன பிறகு, எனக்கு மறுக்கத் தோன்றவில்லை.

படத்தில் ரஜினி ஜோடியாக பார்வையற்ற பெண் கேரக்டரில் ரேவதி நடித்தார். மகேந்திரன் டைரக்ட் செய்தார்.

திட்டமிட்டபடி, படம் வளர்ந்து வந்தது. கிளைமாக்ஸ் காட்சியின்போதுதான் எனக்கும் டைரக்டர் மகேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பார்வையற்ற பெண்ணுக்கு ரஜினி வாழ்வு கொடுக்கிறார். அந்தப் பெண் ரஜினியை மணந்து கொண்ட நேரத்தில் அந்த ஊர் பண்ணையாரால் அவள் கற்பு பறிபோகிறது. இதை தெரிந்து கொண்ட ரஜினி பெருந்தன்மையுடன் "உன் மீது எந்த தவறும் இல்லை. நடந்ததை ஒரு விபத்தாக கருதி மறப்போம்'' என்று சொல்லி மனைவி ரேவதியுடன் வேறு ஊருக்கு புறப்பட்டுப் போகிற மாதிரி படம் முடியும்.

பொதுவாகவே ரஜினி மாதிரி `இமேஜ் வேல்ï' உள்ள நடிகர்கள் படங்களில், ஜோடியாக வருபவர்களுக்கு எந்த மாதிரியான துன்பம் என்றாலும் உயிரைப் பணயம் வைத்தாவது ஹீரோ காப்பாற்றி விடுவார். அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள். "ரஜினியின் மனைவியாக நடிக்கும் ரேவதியின் கற்பு பறிபோகிற மாதிரியான காட்சியை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். எனவே கிளைமாக்சை மாற்றுங்கள்'' என்று மகேந்திரனிடம் சொன்னேன்.

அவரோ, "ஒரிஜினல் கதையில் இப்படித்தான் இருக்கிறது. நமது ரசிகர்கள் புதுமை விரும்பிகள். அதனால் கிளைமாக்சை மாற்ற அவசியமில்லை'' என்றார்.

அப்படியும் நான் விடவில்லை. முதல் இரவில் அந்த பார்வையில்லாத பெண் கணவனிடம் என்ன சொல்கிறாள்? "நான் உங்களுக்கு முன்னாடியே பூவும் பொட்டுமா போயிடணும்னு ஆசைப்படுகிறேன்'' என்கிறாள். பதறிப்போகும் கணவனை கையமர்த்தி, "அப்படி நான் செத்துப்போகும்போது நீங்கதான் என்னை குளிப்பாட்டி புடவை கட்டி விடணும். அதாவது ஒரு பெண் கூட என் உடம்பை பார்க்கக் கூடாது. கணவனா நீங்களே அந்தக் கடமையையும் செய்துடணும்'' என்கிறார்.

இப்படி இன்னொரு பெண்கூட தனது உடம்பை பார்த்து விடக்கூடாது என்று சொல்லும் அவள், வேறொரு ஆண் மகனால் சிதைக்கப்படுவது அந்த கேரக்டரின் தன்மையையே சின்னா பின்னப்படுத்துவது போல் ஆகிவிடாதா? எனவே கிளைமாக்சை ரஜினி கேரக்டரின் தன்மைக்கு பாதிப்பு நேராமல் நாயகியின் விருப்பமும் பூர்த்தியாகிற மாதிரி மாற்றிப் பாருங்கள்'' என்றேன்.

இதற்கிடையே நான் கிளைமாக்சை மாற்றச் சொன்ன விஷயம், ரஜினிக்கும் தெரியவந்தது. அதுபற்றி என்னிடம் பேசிய ரஜினி, "விஜய்! நீங்க சொன்ன கிளைமாக்சையும் எடுத்துவிடுவோம்'' என்றார், ஆர்வமாக.

ஆனால், அதற்குள் ஏற்கனவே எடுத்த கிளைமாக்சுடனேயே படம் தயாராகி விட்டது. அந்த முடிவுடன்தான் படம் ரிலீஸ் ஆகியது.

ரஜினியின் ரசிகர்களால் படத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதற்குப் பிறகு படத்தயாரிப்பு பக்கம் என் பார்வை போகவில்லை.''

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
Tags:    

Similar News