சினிமா

ஜெயலலிதாவுடன் விஜயகுமார் நடித்த படங்கள்

Published On 2018-11-18 17:29 GMT   |   Update On 2018-11-18 17:29 GMT
நடிகர் விஜயகுமார் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'', "மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.
நடிகர் விஜயகுமார் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'', "மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜயகுமார், அன்றைய முன்னணி ஹீரோயின்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார்.

அப்போது படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த ஜெயலலிதா, 2 படங்களில் நடிக்க வந்த அழைப்பை ஏற்றார். 2 படத்திலுமே அவருக்கு விஜயகுமார் ஜோடியாக நடித்தார். துரதிருஷ்டவசமாக அந்தப் படங்கள் திரையை எட்டிப் பார்க்காமலே போய்விட்டன.

அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

"நான் மிகவும் மதிக்கும் ஒரு கலைஞராக மேடம் ஜெயலலிதா இருந்தார். அப்போது அவர் சில காலம் நடிப்புலகை விட்டு ஒதுங்கியிருந்தார். பிரபல எழுத்தாளர் மகரிஷியின் `நதியைத் தேடி வந்த கடல்' நாவலை படமாக்க முடிவு செய்தனர். இதில் சரத்பாபு நாயகன். ஜெயலலிதா நாயகி.

இதே நேரத்தில் டைரக்டர் பாலகிருஷ்ணன் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'' என்ற படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தில் ஹீரோவாக என்னை ஒப்பந்தம் செய்தார். படத்தில் எனக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிப்பார் என்றார்கள். இதற்கு முன் அவருடன் நான் எந்த படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை.

இதே நேரத்தில் டைரக்டர் வி.சி.குகநாதன் "மணிப்பூர் மாமியார்'' என்றொரு படம் இயக்க வந்தார். இதிலும் நானும் மேடம் ஜெயலலிதாவும்தான் ஜோடி.

மேடத்தை நான் செட்டில் பார்க்கும்போதே, அவரது பண்பையும், அறிவாற்றலையும் புரிந்து கொண்டேன்.

அவருக்கான காட்சி முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பார். சென்னையில் உள்ள முருகாலயா ஸ்டூடியோவில் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. இந்த 10 நாட்களிலும் எதையும் அளந்து பேசும் அவரது பண்பும், விஷயங்களை அறிவுபூர்வமாக விவாதிக்கும் ஆற்றலும் என்னை பெரிதும் வியக்க வைத்தன.

அது 1978-ம் வருடம். அந்த நாட்களில் சிங்கப்பூர் போவதென்பது ரொம்பவும் அபூர்வ விஷயம். போகிறோம் என்று தெரிந்தாலே நட்பு வட்டமும், உறவினர்களும் `எனக்கு அது வாங்கி வாருங்கள், இது வாங்கி வாருங்கள்' என்று பெரிய லிஸ்ட்டை கொடுத்து விடுவார்கள்.

"மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு நடந்த நேரத்தில் நான் சிங்கப்பூருக்கு போய்வர இருந்தேன். படப்பிடிப்பில் இருந்த பலரும் அவரவருக்கு தேவையான லிஸ்ட்டை  கொடுத்தார்கள்.  மேடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. நானாக அவரிடம் போய், "மேடம்! சிங்கப்பூரில் உங்களுக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமானால் சொல்லுங்கள்'' என்று கேட்டேன். அவரோ, "கேட்டதற்கு நன்றி. எதுவும் வேண்டாம்'' என்று ஒற்றை வரியில் முடித்து விட்டார்.

என்றாலும் நான் விடவில்லை. "எல்லாரும் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் விரும்பியதை வாங்கி வருவது எனக்கு சிரமமான காரியம் அல்ல. உங்களுக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமானால் தயங்காமல் சொல்லுங்கள் மேடம்'' என்றேன்.

நான் இப்படி வேண்டி விரும்பி கேட்ட பிறகே அவர், "சிங்கப்பூரில் `கிட்காட்' சாக்லெட் கிடைத்தால் வாங்கி வாருங்கள்'' என்றார்.

சிங்கப்பூரில் போன வேலையை முடித்து விட்டு ஷாப்பிங் செய்தால், மேடம் கேட்ட `கிட்காட்' சாக்லெட் மட்டும் `கிடைப்பேனா' என்கிற மாதிரி என்னை அலையவைத்தது. கடைசியில் அலைந்து திரிந்து தேடியதில், ஒரு ஷாப்பிங் மார்க்கெட்டில் அந்த சாக்லெட் கிடைத்தே விட்டது.

இருந்ததில் பெரிய பாக்ஸாக வாங்கிக் கொண்டு விமானத்தில் வந்தேன். சென்னை வந்ததும் மேடத்தின் வீட்டுக்கு அந்த சாக்லெட் பாக்சை கொடுத்தனுப்பினேன். கிடைத்த சில நிமிடங்களில் டெலிபோனில் எனக்கு நன்றி சொன்னார்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை 10 ஆயிரம் அடியிலும், மணிப்பூர் மாமியார் 9 ஆயிரம் அடியுடனும் நின்று போயின. இது, இன்றளவும் எனக்கு வருத்தம் தரும் விஷயம்.

இந்த சமயத்தில்தான், எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று ஜெயலலிதா மேடம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.''

இவ்வாறு கூறினார், விஜயகுமார். 
Tags:    

Similar News