சினிமா

விஜயகுமாருடன் பாரதிராஜா மோதல்

Published On 2018-11-17 17:31 GMT   |   Update On 2018-11-17 17:31 GMT
தன்னுடைய முதல் படமான ``16 வயதினிலே'' படத்தை விஜயகுமார் பார்க்க வராததால், பாரதிராஜா கோபம் கொண்டார். ``தன் படங்களில் நடிக்க அவரை அழைப்பதில்லை'' என்று முடிவு செய்தார்.
தன்னுடைய முதல் படமான ``16 வயதினிலே'' படத்தை விஜயகுமார் பார்க்க வராததால், பாரதிராஜா கோபம் கொண்டார்.  ``தன் படங்களில் நடிக்க அவரை அழைப்பதில்லை'' என்று முடிவு செய்தார்.

ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய `கிழக்குச்சீமையிலே' படத்தில் விஜயகுமாரை நடிக்க வைக்க வேண்டிய கட்டாயம் பாரதிராஜாவுக்கு ஏற்பட்டது.

பாரதிராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி நடிகர் விஜயகுமார் கூறியதாவது:-

``ஜானகி சபதம் படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய போதே பாரதிராஜாவின் திறமையை தெரிந்து கொண்டேன். எனக்கும் `வெண்ணிற ஆடை' நிர்மலாவுக்குமான பாடல் காட்சியை எப்படி எப்படி எடுத்தால் சிறப்பாக அமையும் என்று பாரதிராஜா விலாவாரியாக என்னிடம் விவரித்தபோது, ``இவர் சினிமாவில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்'' என்பதை உணர்ந்து கொண்டேன்.

படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம், பாடல் காட்சி பற்றிய பாரதிராஜாவின் அற்புதமான கற்பனை பற்றி நான் கூறியபோது அவரும் ஆச்சரியப்பட்டார். அப்போது நான் பிஸியாக இருந்த நிலையிலும், ``மறுபடியும் அந்தப் பாடல் காட்சியை எடுப்பதாக இருந்தால் கால்ஷீட் தருகிறேன். அதோடு பாடல் காட்சிக்கு தேவையான பிலிம் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கே.ஆர்.ஜி.யிடம் கூறினேன்.

ஆனால் கே.ஆர்.ஜி., அதற்கு உடன்படவில்லை ``மறுபடியும் படப்பிடிப்பு நடத்த நேரம் இல்லை'' என்று கூறி விட்டார்.

அந்தப் படம் ரிலீசான ஒரு சில மாதங்களில், `16 வயதினிலே' படத்தை பாரதிராஜா இயக்குவதாக செய்திகள் வந்தன. நான் குடும்பத்துடன் தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் குடியிருந்து வந்தேன். பாரதிராஜாவும் அதே எல்லையம்மன் காலனியில்தான் தன் குடும்பத்தை குடி வைத்திருந்தார். நான் படப்பிடிப்புக்கு காரில் புறப்படும்போதோ, இரவில் திரும்பி வரும்போதோ பெரும்பாலும் பாரதி என் பார்வையில் படுவார். ஒரு சில வினாடிகள் நலம் விசாரித்துக் கொள்வோம்.

இப்படி நான் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், ஒருநாள் காலையில் படப்பிடிப்புக்கு புறப்பட்டேன். கார் புறப்பட்டு தெருமுனையைக் கடந்த போது திடீரென காரை கைகாட்டி நிறுத்தச் சொன்னார், பாரதி.

கார் நின்றதும், ``என்ன பாரதி? என்ன விஷயம்?'' என்று கேட்டபடி இறங்கினேன்.

``16 வயதினிலே என்று ஒரு படம் இயக்கியிருக்கிறேன். இன்று மாலை படத்தின் சிறப்புக் காட்சி இருக்கிறது. அவசியம் நீங்கள் வந்து படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டும்'' என்றார், பாரதி.

நான் அவரிடம், ``படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்து விட்டால், நிச்சயம் வந்து விடுவேன். தவிர்க்க முடியாமல் படப்பிடிப்பு நீண்டு போனால் மட்டும் வர முடியாமல் போய் விடும், எனவே, வர முடியாவிட்டால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்'' என்று சொன்னேன்.

ஆனால், சொல்லி வைத்த மாதிரி அன்றைய படப்பிடிப்பு இரவு 9 மணி வரை நீண்டு விட்டது. இதனால் பாரதிராஜா படத்தின் `பிரிவிï' காட்சிக்கு போக முடியவில்லை.

அதற்குப் பிறகு அந்த விஷயத்தை நான் மறந்து விட்டேன். ஆனால் பாரதிராஜா மறக்காமல் இருந்திருக்கிறார். 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மறுமலர்ச்சியையும், கதைப்புரட்சியையும் உருவாக்கி, மிகப் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்துக்கு வந்து விட்டார். தொடர்ந்து `கிழக்கே போகும் ரெயில்'', ``சிகப்பு ரோஜாக்கள்'', ``நிறம் மாறாத பூக்கள்'' என்று, அவர் இயக்கத்தில் வெளி வந்த எல்லாமே வெற்றிப் படங்களாயின.

நானும் அவர் வளர்ச்சியில் பெருமைப்பட்டேன். நான் பிஸியாக இருந்ததால் அவர் படங்களில் நடிக்க என்னை அழைக்காததை ஒரு விஷயமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

இப்படி வருஷங்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர் `கலைப்புலி' தாணு சார், பாரதிராஜா இயக்கத்தில் ``கிழக்குச் சீமையிலே'' என்ற படத்தை தயாரிக்கவிருந்தார். அண்ணன் - தங்கையின் பாசப் பிணைப்பு தான் கதையின் முடிச்சு என்பதால் அண்ணன்- தங்கை கேரக்டர்களில் யார் யாரைப் போடலாம் என்று தாணு சார் பாரதிராஜாவிடம் ஆலோசித்திருக்கிறார்.

தங்கை கேரக்டரில் நடிக்க ராதிகா முடிவானார்.

இந்நிலையில், `கலைப்புலி' தாணு சாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. `கிழக்குச் சீமையிலே' என்று ஒரு படம் தயாரிக்கிறேன், பாரதிராஜா டைரக்டு செய்கிறார். அண்ணன்- தங்கை இடையேயான அளப்பரிய பாசம்தான் கதை. அண்ணன் கேரக்டர் சிவாஜி சார் பண்ணக்கூடிய அளவுக்கு வலுவானது. நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாரதிராஜாவிடம் சொன்னேன். அவரோ ``முடியாது. நான் இயக்கும் படங்களில் அவரைப் போடுவதில்லை'' என்று கூறி விட்டார். காரணம் கேட்டேன். அதற்கு அவர், ``நான் முதன்முதலாக இயக்கிய ``16 வயதினிலே' படத்தின் `பிரிவிï' காட்சியை பார்க்க  வருந்தி அழைத்தும் வராமல் இருந்து விட்டார். அப்போதே நான் இயக்கும் படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்று தீர்மானித்து விட்டேன்'' என்றார்.

பாரதிராஜா என்ற பெரிய கலைஞனுக்குள் இப்படியொரு குழந்தையா? எனக்குள் அந்த நேரத்தில் ஆச்சரியம் தான் தலைதூக்கியது. ``நானே போய் பாரதியை பார்த்து பேசுகிறேன் சார்!'' என்று தாணுவிடம் கூறி விட்டேன்.

நேராக பாரதிராஜா வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு புரிந்து விட்டது. என்றாலும் இயல்பாக வரவேற்றுப் பேசினார்.

``ஒரு பிஸி நடிகரின் அன்றாட நாட்கள் கூட அவனுக்கு சொந்தமில்லை என்பதை உங்கள் திரைவாழ்விலும் பார்த்திருப்பீர்களே'' என்று பேச்சின் இடையே கூறினேன். பாரதியிடம் நெகிழ்ச்சி தெரிந்தது. `கிழக்குச் சீமையிலே' படத்தில் நான் அண்ணன் ஆனது இப்படித்தான். அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக கொண்ட அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.''

இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

பாரதிராஜா விஜயகுமாரை இத்தோடு விட்டு விடவில்லை. அடுத்து அவர் இயக்கிய ``அந்தி மந்தாரை'' படத்திலும் அவரை நடிக்க வைத்தார். சிறந்த படத்துக்கான மத்திய அரசு விருது அப்படத்துக்கு கிடைத்தது. தமிழக அரசு அவருக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசை வழங்கி கவுரவப்படுத்தியது.

ஆனாலும் விஜயகுமாருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்காததில் பாரதிராஜாவுக்கு ரொம்பவும் வருத்தம்.

அதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

``மதுரையில் நடந்த படவிழாவில் எனக்கு மத்திய அரசின் விருது கிடைக்காத வேதனையை பாரதிராஜா பகிர்ந்து கொண்டார். ``இந்தப் படத்துக்கு மத்திய அரசு விருது கிடைத்த மாதிரி, படத்தில் அற்புதமாக நடித்த விஜயகுமாருக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போய் விட்டது. என்றாலும் நிச்சயம் என் வாழ்நாளில் நான் இயக்கி அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தே தீருவேன்'' என்று உணர்ச்சிமயமாய் பேசினார்.

பாரதிராஜா என் நடிப்பு மீது வைத்த இந்த நம்பிக்கையை விடவா எனக்கு விருது பெரிது? அப்போதே தேசிய விருது பெற்றதை விட அதிக சந்தோஷம் அடைந்தேன்''

இவ்வாறு விஜயகுமார் கூறினார். 
Tags:    

Similar News