சினிமா

ஸ்ரீதர் படத்தில் நடிக்க விஜயகுமார் முயற்சி

Published On 2018-11-08 15:35 GMT   |   Update On 2018-11-08 15:35 GMT
டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்பிய விஜயகுமார், அவர் நடத்திய புதுமுகங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார்.
டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்பிய விஜயகுமார், அவர் நடத்திய புதுமுகங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார்.

சிவாஜியும், பத்மினியும் நடித்த "ஸ்ரீவள்ளி'' படத்தில் பாலமுருகனாக நடித்தாலும் அதற்குப்பிறகு புதிய படங்கள் எதுவும் விஜயகுமாருக்கு கிடைக்கவில்லை. இதனால் நாடகங்களில் நடித்தபடி, சினிமா வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தார்.

நாலைந்து வருடம் இதே நிலை நீடித்தது. ஆனாலும் சோர்ந்து விடாமல் எஸ்.வி.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டு இருந்தார்.

இந்த சமயத்தில் டைரக்டர் ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்'' படம் வந்தது. காதலை புதிய கோணத்தில் அணுகிய காட்சிகள் ஸ்ரீதருக்கு பெரும் புகழைத் தந்ததோடு, படத்தையும் வெற்றிப் பட்டியலில் சேர்த்தது.

இந்தப்படம் வெளிவந்த நேரத்தில் வையாபுரி ஜோதிடர் மூலம் விஜயகுமாருக்கு நடிகர் முத்துராமன் அறிமுகமானார். முத்துராமன் படங்களில் நடித்து வந்ததோடு நாடகங்களிலும் நடித்தார். அப்போது `வடிவேல் வாத்தியார்', தேரோட்டி மகன்' நாடகங்கள் ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்தன. முத்துராமன் படங்களில் வளரத் தொடங்கிய நேரமாதலால், அப்போது அவர் நடித்து வந்த இந்த நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நேரம் கிடைக்காத நிலை. அதனால், தான் நடித்து வந்த கேரக்டரில் விஜயகுமாரை நடிக்க வைக்க முத்துராமனே சிபாரிசு செய்தார்.

இதைத் தொடர்ந்து "சுயம்வரம்'' என்ற புதிய நாடகத்திலும் விஜயகுமாருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. இதில் "இரவும் பகலும்'' பட கதாநாயகி வசந்தா, காந்திமதி ஆகியோரும் நடித்தார்கள். இரவில் நாடகத்தில் நடிப்பது, காலையில் பட வாய்ப்புக்கான முயற்சி என்று விஜயகுமார் தீவிரப்பட்டது இந்த சமயத்தில்தான்.

இந்த நேரத்தில்தான் டைரக்டர் ஸ்ரீதர் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வந்தார். இதே மாதிரியான எண்ணம் மற்ற டைரக்டர்களுக்கும் இருந்தது. இதனால், டைரக்டர் ஸ்ரீதர், டைரக்டர்கள் ராமண்ணா, பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன் ஆகியோர் ஒன்று சேர்ந்து, "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்'' என்ற அமைப்பை உருவாக்கினர்.

இந்த அமைப்பு மூலம் புதுமுகங்களை தேர்ந்தெடுத்து படம் தயாரிப்பது அவர்கள் எண்ணம். இதற்காக புதுமுகத் தேர்வும் நடத்தினார்கள். அதில் விஜயகுமாரும் கலந்து கொண்டார்.

அதுபற்றி அவர் கூறுகிறார்:-

டைரக்டர் ஸ்ரீதர் புதுமையை விரும்பினார். துணிச்சலாக தனது படங்களில் புதுமுகங்களை நடிக்க வைத்தார். படத்தையும் வெற்றிப் படமாக்கினார்.

புதுமுகங்களை தேர்ந்தெடுக்க, ஸ்ரீதரும், மற்ற டைரக்டர்களும் இணைந்து, "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்'' தொடங்கினர். இதுபற்றி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஐந்தாறு வருடங்களாக புதியவர்கள் சினிமாவுக்குள் வரமுடியாமல் இருந்த நிலை, இனி மாறும் என நம்பிக்கையும் ஏற்பட்டது.

 புதுமுகத் தேர்வு சென்னையில் உள்ள நார்த்போக் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கட்டுக்கடங்காத கூட்டம். பார்க்கிற முகங்களில் எல்லாம் `கதாநாயக' களை. இந்த அமைப்பில் டைரக்டர் ராமண்ணாவும் இருந்ததால், நிச்சயம் நாம் தேர்வு செய்யப்பட்டு விடுவோம் என்று நம்பினேன்.

இந்த இடத்தில் டைரக்டர் ராமண்ணா பற்றி சொல்லியே ஆகவேண்டும். "ஸ்ரீவள்ளி'' படத்திற்குப் பிறகு, "நேரம் வரட்டும்; நானே கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்'' என்று சொல்லியிருந்தார். அதனால் நாடகங்களில் நடித்தாலும் அவ்வப்போது வந்து அவரிடம் `ஆஜர்' கொடுத்து விடுவேன்.

இந்த மாதிரியான ஒருவேளையில் அவர் "சொர்க்கத்தில் திருமணம்'' என்ற படத்தை இயக்கினார். படத்தின் ஹீரோயின் லதா. என்னை ஹீரோவாக போட ராமண்ணா முடிவு செய்திருந்தார். ஆனாலும் ரவிச்சந்திரனே ஹீரோவாக நடித்தார். இதனால் நான் மனதளவில் உடைந்து போய்விடக்கூடாது என்பதற்காக, படத்தில் லதாவை ஒருதலையாக விரும்பும் ஒரு கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார்.

இப்படி நம் மேலும் அக்கறைப்பட ஒரு டைரக்டர் இருக்கிறார் என்பது இயல்பாகவே ஒரு தைரியத்தை என் மனதிற்குள் ஏற்றி வைத்திருந்தது. தேர்வுக் குழுவில் டைரக்டர் ராமண்ணாவும் இடம் பெற்றிருந்ததால் நிச்சயம் தேர்வாவோம் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்றது.

என் முறை வந்தபோது, ஏதாவது ஒரு காட்சியை நடித்துக்காட்ட சொன்னார்கள். நான் அப்போது நடித்துக் கொண்டிருந்த "வடிவேலு வாத்தியார்'' நாடகத்தில் நான் நடித்த ஒரு காட்சியை நடித்துக் காட்டினேன்.

ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு வந்த இடத்தில், தேர்வானவர்கள் ஐந்தே ஐந்து பேர்தான். அந்த ஐந்து பேரில் நானும் ஒருவன். ஆம்பூர் பாபு, "அலைகள்'' செல்வகுமார் ஆகியோரும் இந்த ஐவர் குழுவில் இடம் பிடித்திருந்தனர்.

ஆனாலும் 2 பேர் மட்டும்தான் அப்போது தேவை என்பதற்காக டைரக்டர்கள் குழு மீண்டும் பரிசீலனை செய்தது. முடிவில் `அலைகள்' செல்வகுமார், ஆம்பூர் பாபு ஆகியோரை எடுத்துக்கொண்டு மற்ற 3 பேரிடமும் "முகவரியைக் கொடுத்து விட்டுப் போங்கள். பிறகு தகவல் தெரிவிக்கிறோம்'' என்றார்கள்.

எனக்கு கோபம் வந்துவிட்டது. என் மீது அக்கறையுள்ளவர் என்பதால் டைரக்டர் ராமண்ணாவை சந்தித்து என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். "என்ன சார்! நீங்கள் இருந்தும் எனக்கு இப்படி ஆகிவிட்டதே!'' என்றேன், வேதனையுடன்.

நான் இப்படிக் கூறியதும், ராமண்ணாவிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வந்தன.

"என் வேதனை புரியாமல் சிரிக்கிறீர்களே அண்ணா!'' என்றேன்.

பதிலுக்கு அவரோ, "இவங்க படம் எதுவும் எடுக்க மாட்டாங்க. நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நான் இருக்கிறேன்!'' என்றார்.

மூவி மேக்கர்ஸ் கவுன்சில் பற்றி அவர் சொன்னது உண்மை ஆயிற்று. கடைசி வரை அவர்கள் படமே எடுக்கவில்லை.''

இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார். 
Tags:    

Similar News