சினிமா

விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்த 'பூம்புகார்'

Published On 2018-02-07 16:46 GMT   |   Update On 2018-02-07 16:46 GMT
கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை - வசனத்தில் உருவான "பூம்புகார்'' படத்தில், விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்து காட்டினார்.
கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை - வசனத்தில் உருவான "பூம்புகார்'' படத்தில், விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்து
காட்டினார்.ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் "கோவலன்'' என்ற பெயரில் நீண்ட நெடுங்காலமாக நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது.

இந்தக் கதையை, 1942-ல் ஜுபிடர் பிக்சர்சார் "கண்ணகி'' என்ற பெயரில் படமாகத் தயாரித்தனர். கண்ணாம்பா கண்ணகியாகவும், பி.யு.சின்னப்பா கோவலனாகவும் அற்புதமாக நடித்தனர்.

குறிப்பாக, தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் வசனத்தை தெளிவாகவும், உணர்ச்சி பொங்கவும் பேசி நடித்தார், கண்ணாம்பா. பாண்டிய மன்னன் அவையில், "என் கணவன் கள் வனா?'' என்று நீதி கேட்கும்போது, தீப்பொறி பறக்க அவர் பேசிய வசனங்கள், காலத்தைக் கடந்தும் வாழ்கின்றன.

உணர்ச்சியும், உயிர்த் துடிப்பும் நிறைந்த தமிழில் வசனங்களை எழுதியிருந் தார், இளங்கோவன். வசனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதன் முதலாக இலக்கணம் வகுத்தவர் இளங்கோவன்.

கண்ணகி - கோவலன் கதையை புதிய மெருகுடன் தயாரிக்க கருணாநிதி விரும்பினார். "பூம்புகார்'' என்ற பெயரில், திரைக்கதை - வசனம் எழுதினார். மேகலா பிக்சர்ஸ் அதைப் படமாகத் தயாரித்தது.

கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். 1964-ல் வெளியான இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.

"பூம்புகார்'' படம் உருவாக பின்னணியில் நடைபெற்ற நிகழ்ச்சி என்ன, கண்ணகி வேடம் தனக்குக் கிடைத்தது எப்படி என்பது பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

"நானும் என் கணவரும் முத்து மண்டபம் என்ற நாடகத்தை சென்னையில் நடத்தினோம். கலைஞர், மா.பொ.சி., டி.கே.சண்முகம் மற்றும் நிறைய பேர் நாடகத்திற்கு வந்திருந்தார்கள்.

நாடகம் முடிந்த பிறகு, எல்லோரும் வாழ்த்திப் பேசினார்கள். "சிலம்பு செல்வர்'' ம.பொ.சி. அவர்கள் பேசும்போது, "விஜயகுமாரியை இந்த நாடகத்தில் பார்க்கும்போது எனக்கு கண்ணகியின் நினைவுதான் வருகிறது. மறுபடியும் கண்ணகி வரலாற்றை படமாக எடுத்தால் என்ன என்று தோன்றுகிறது. கண்ணகியாக விஜயகுமாரி நடிக்க வேண்டும். அந்த அளவிற்கு விஜயகுமாரியின் நடிப்பு மெய்சிலிர்க்கச் செய்தது'' என்று

கூறினார்.அதையடுத்து பேசிய கலைஞர் அவர்கள், "கண்ணகி வரலாற்றை நான் `பூம்புகார்' என்ற பெயருடன் படமாக எடுக்கிறேன். அந்தப் படத்தில் ராஜேந்திரனும், விஜயகுமாரியும் நடிக்க வேண்டும். நடிப்பார்கள்!'' என்று சொன்னார்.

பிறகு பேசிய என் கணவர், "கலைஞர் அவர்கள் சொன்னதுபோல், பூம்புகார் படத்தில் நானும் விஜயகுமாரியும் நடிக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

இப்படித்தான் பூம்புகார் படம் எடுக்க பிள்ளையார் சுழி போடப்பட்டது. பூம்புகார் படப்பிடிப்பு தொடங் குவதற்கு முன்பாக, கண்ணாம்பா நடித்த "கண்ணகி'' படத்தைப் பார்க்கும்படி என்னிடம் சிலர் சொன்னார்கள். நான் அதை பார்க்கவில்லை. காரணம், அவர் நடித்த அளவிற்கு என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்!

நான் கண்ணாம்பா அம்மா வீட்டிற்கு போனேன். "அம்மா! நீங்கள் நடித்த கண்ணகி வேடத்தில் நான் நடிக்கப் போகிறேன். என்னை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று அவர் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி வந்தேன்.

இந்தப்படத்தில் நடிக்கும்போது நான் உண்ணாவிரதம் இருந்து நடித்தேன். "கண்ணகி சாதாரணப் பெண் இல்லை. அம்மனின் அவதாரம்'' என்று என் பாட்டி சொன்னார்கள்.

பூம்புகார் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. "என் கணவர் கள்வன் இல்லை'' என்று பாண்டிய மன்னன் முன் நான் வாதாடும் காட்சி. படப்பிடிப்பு கோல்டன் ஸ்டூடியோவில் நடந்தது.

கையில் வசனங்கள் எழுதிய காகிதத்துடன் நான் உற்சாகத்துடன் படப்பிடிப்பு நிலையத்திற்குள் சென்றேன். அங்கு கலைஞர் அவர்கள், மாறன், டைரக்டர் ப.நீலகண்டன் ஆகியோருடன் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும், நான் மனப்பாடம் செய்து வந்த வசனங்கள் எல்லாம் மறந்து போயிற்று. ஒரே பயம். கலைஞர் என்னை அழைத்து, "பயப்பட வேண்டாம். தைரியமாக நடி'' என்றார்.

ஓ.ஏ.கே. தேவர் பாண்டிய மன்னன் வேடத்திலும், பாண்டிய மன்னன் மனைவி வேடத்தில் ஜி.சகுந்தலாவும் மற்றும் நிறைய பேர் அரச உடையிலும் சபையில் அமர்ந்திருந்தார்கள்.

இந்த காட்சியில் எப்படி வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று, காட்சி எடுக்கும் முன் விவரமாக சொன்னார்கள். நான் ஒரு தடவை நடித்துக் காட்டினேன். "நீ இதை மனதில் வைத்துக் கொண்டு இப்படியே நடிக்க வேண்டும்'' என்று சொன்னார்கள்.

அந்த தர்பார் மண்டப செட் ரொம்ப பெரிதாக இருந்தது. இப் போது மாதிரி முதலில் நடித்து விட்டு, பிறகு வேறொரு நாள் போய் வசனத்தை பதிவு செய்யும் வசதி அக்காலத்தில் கிடையாது. நடிக்கும்போதே வசனங்களை பதிவு செய்வார்கள். அதற்காக தலைக்கு மேலே மைக் இருக்கும். இந்த தர்பார் மண்டப செட் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக போடப்பட்டிருந்ததால் `மைக்'கை ரொம்பவும் மேலே வைத்திருந்தார்கள். இதனால் நான் வசனங்களை சத்தம் போட்டு பேசவேண்டியிருந்தது.

சீன் நன்றாக அமையவேண்டும் என்று என் மனதில் ஒரு வெறி - ஒரு வேகம் இருந்தது. எந்த அளவிற்கு நான் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன் என்பது எனக்குத்தான் தெரியும்.

ஒரு சமயம் வசனத்தை கத்திப்பேசியதால், என் தொண்டையில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. இப்படி ரத்தம் சிந்தி நடித்த "பூம்புகார்'' வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. என்னை வாழ்த்தி ஏராளமான வாழ்த்துக் கடிதங்கள் வந்தன. அதே சமயம், நேரிலும், போன் மூலமும் வாழ்த்தியவர்கள் ஏராளம். இப்படி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டு இருந்தேன்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், இந்தப் படத்தைப் பார்த்தார். "கண்ணகி வேடத்தில் நீ நடித்ததை பார்க்கும்போது, கண்ணகி உன்னைப்போல்தான் இருந்திருப்பார் என்று எல்லோருக்கும் தோன்றுகிறது. உனக்கு என் வாழ்த்துக்கள்'' என்று என்னைப் பாராட்டினார். அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

நான், கண்ணகி வேடத்தில் நடித்ததற்கு ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் உலகம் உள்ளவரை கண்ணகி நினைவு வரும் போதெல்லாம் என் பெயரும் நினைவுக்கு வரும் அல்லவா?

என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வேடத்தைக் கொடுத்த கலைஞர் அவர்களுக்கும், எனக்கு இந்த வேடம் கிடைக்க காரணமாய் இருந்த சிலம்புச்செல்வர் மா.பொ.சி. அவர்களுக்கும், டி.கே.சண்முகம் அவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இதற்கெல்லாம் மகு டம் வைத்தாற்போல், கண்ணகிக்கு சிலை எடுக்க வேண்டும் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

அதன்படி கடற்கரையில் கண்ணகிக்கு சிலை அமைக்கப்பட்டது. கையில் சிலம்புடன் கண்ணகி நிற்கும் சிலை, பூம்புகார் படத்தில் நான் தோன்றிய தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. எனவே, கடற்கரையில் நானே சிலையாக நிற்பது போன்ற ஒரு உணர்வு எனக்குள்

இருக்கிறது.அப்போதெல்லாம் தினமும் காலை 4-30 மணிக்கு எழுந்து கடற்கரைக்கு வாக்கிங் போவேன். தினமும் கடற்கரையில் இருக்கும் கண்ணகி சிலையைப் பார்ப்பேன். அப்போது என் மனதில் எண்ணற்ற இன்ப அலைகள் வந்து மோதும். தினமும், கண்ணகி தெய்வத்தை கையெடுத்துக் கும்பிடுவேன்.

பூம்புகார் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம், நாங்கள் இலங்கைக்கு சென்றோம்.

என் கணவருக்கு வில்லுப்பாட்டு நன்றாகத் தெரியும். கண்ணகி வரலாற்றை வில்லுப்பாட்டாக தயாரித்து, அந்த நிகழ்ச்சியை நடத்தத்தான் நாங்கள் இலங்கைக்கு சென்றோம்.

இலங்கையில் எங்களுக்கு கிடைத்த வரவேற்பை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு. மக்களின் அன்பான வரவேற்பு. ஒவ்வொரு வீட்டிலும் விருந்து உபசரிப்பு. எங்களுக்குத்தான் நேரம் போதவில்லை.

இலங்கை பயணத்தை முடித்துவிட்டு, நாங்கள் சென்னைக்கு திரும்பினோம். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இருக்கும் எங்கள் வீடு வரைக்கும் நாங்கள் திறந்த ஜீப்பில் வந்தோம். ரோட்டின் இரு பக்கமும் ரசிகர்கள் நின்று கொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.''

இவ்வாறு  கூறினார், விஜயகுமாரி. 
Tags:    

Similar News