சினிமா

ஆட்டுக்கார அலமேலு படத்தின் கதாநாயகியாக ஸ்ரீபிரியாதான் நடிக்க வேண்டும்: தேவர் கண்டிப்பு

Published On 2017-07-10 17:04 GMT   |   Update On 2017-07-10 17:04 GMT
தேவர் பிலிம்சின் பெரிய வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு." இதன் கதாநாயகியாக 'படாபட்' ஜெயலட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று பலர் யோசனை கூறினார்கள். அதை ஏற்க சாண்டோ சின்னப்ப தேவர் மறுத்துவிட்டார்.

தேவர் பிலிம்சின் பெரிய வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு." இதன் கதாநாயகியாக 'படாபட்' ஜெயலட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று பலர் யோசனை கூறினார்கள். அதை ஏற்க சாண்டோ சின்னப்ப தேவர் மறுத்துவிட்டார்.

ஸ்ரீபிரியாதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதில் தேவர் உறுதியாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் வேடிக்கையானது. "ஸ்ரீபிரியாவின் உண்மைப் பெயர் அலமேலு. எனவே, அலமேலுவாக அந்தப் பெண்தான் நடிக்க வேண்டும்" என்றார், தேவர்!

இந்தக் காலக்கட்டத்தில் தேவர் பிலிம்ஸ் தயாரித்த இரண்டொரு படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் அடுத்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டார், தேவர்.

"ஆட்டுக்கார அலமேலு"வின் "முதல்நாள் படப்பிடிப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்தது. தேவரின் மருமகன் தியாகராஜன்தான் டைரக்டர். ஸ்ரீபிரியா ஆற்றில் குளிக்கிறபோது பாடுகிற பாடல் காட்சிதான் முதல் காட்சியாக எடுக்கப்பட இருந்தது.

அப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, வேகமாக காரில் வந்து இறங்கினார் தேவர். டைரக்டரை பார்த்து, "மாப்ளே! முதல் 'ஷாட்'டே ஓ.கே. ஆகணும். இல்லாவிட்டால் 'பேக்கப்' பண்ணிட்டு, எல்லாரும் ஊருக்குப் புறப்பட வேண்டும்" என்றார். இதனால் ஸ்ரீபிரியாவுக்கும், மற்றவர்களுக்கும் பரபரப்பும், படபடப்பும் அதிகமாயின. ஆயினும், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு ஸ்ரீபிரியா இயல்பாக நடித்தார். முதல் ஷாட்டே ஓகே ஆகியது. "ஆத்துல மீன் பிடிச்சு ஆண்டவனே உன்னை நம்பி" என்ற பாடல் காட்சிதான் அது.

இந்தப் படத்துக்குப் பிறகு, தேவர் பிலிம்சில் ஏழெட்டு படங்களில் தொடர்ச்சியாக நடித்தார், ஸ்ரீபிரியா. பூஜை போட்டதும், முதல் ஷாட்டில் ஸ்ரீபிரியாவைத்தான் படம் பிடிக்கச் சொல்வார், தேவர். அந்த முதல் ஷாட் என்ன தெரியுமா? "மருதமலை முருகன் அருளால் மகத்தான வெற்றி கிடைக்கணும்" என்று ஸ்ரீபிரியா வசனம் பேசுவதுதான்!

பிரபல ஹீரோக்கள் நடிக்கும் சமயத்தில்கூட, முதல் ஷாட்டில் ஸ்ரீபிரியாதான் இந்த வசனத்தைப் பேசி நடிக்க வேண்டும். இதை கதாநாயக நடிகர்கள் கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவர்களிடம், "தப்பா நினைச்சுக்காதீங்க. இது 'லக்கி பாப்பா'ங்கறதால முதல் வசனத்தைப் பேச வைக்கிறேன்" என்பார்.

ஆட்டுக்கார அலமேலு படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அதை இந்தியிலும் எடுத்தார்கள். இந்தியில் ஸ்ரீபிரியா கேரக்டரில் ராமேஸ்வரி நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் 'கொட்டேலு பொன்னம்மா' என்ற பெயரில் எடுத்தபோது அதில் ஸ்ரீபிரியா நடித்தார். தமிழில் அலமேலு. தெலுங்கில் பொன்னம்மா. "கொட்டேலு" என்றால் தெலுங்கில் ஆடு என்று அர்த்தம்.

இந்தப்படமும் வெற்றி பெற, ஸ்ரீபிரியாவுக்கு தெலுங்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. அவரை ஆந்திராவில் எங்கே பார்த்தாலும் "கொட்டேலு" பொன்னம்மா என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.

இப்போதும் ஆந்திரா பக்கம் யாராவது அவரைப் பார்த்தால்கூட, 'கொட்டேலு பொன்னம்மா' என்று அழைப்பது தான் ஆச்சரியம்!

ஸ்ரீபிரியா நடிக்க வந்த புதிதில் யாருடனும் பேசவே ரொம்பத் தயங்குவார். படப்பிடிப்பு இடைவேளையில்கூட, முகத்தை 'உம்' என்று வைத்துக் கொண்டிருப்பார். 'கலகல'வென்று பேசும் அளவுக்கு அவரை மாற்றியது அவரது அம்மா கிரிஜாதான்.

'எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லோரும் உன்னிடம் மதிப்பும், மரியாதையும் வைப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற, சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும் அவசியம்' என்று எடுத்துக் கூறினார். இதனால், ஸ்ரீபிரியா தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டார்.

ஸ்ரீபிரியா, எல்லோருடனும் கலகலப்பாகப் பேசாமல் இருந்ததற்கு, இன்னொரு காரணமும் உண்டு. அதுதான் மொழிப்பிரச்சினை! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும், ஆங்கிலப் பள்ளியில் படித்த காரணத்தால், நாக்கில் ஆங்கிலம்தான் துள்ளி விளையாடியதே தவிர, தமிழில் கோர்வையாகப் பேசத் திணறினார்!

அப்படியிருந்த ஸ்ரீபிரியா, பின்னர் அழகாகவும், சரளமாகவும் தமிழ் பேசியது எப்படி? அவரே கூறுகிறார்:-

"நான் இந்த அளவுக்கு தெளிவாக தமிழ் பேசுவதற்கு பின்னணியில் இருப்பது "தினத்தந்தி"தான். என் முதல் தமிழ் ஆசான் "தினத்தந்தி"தான் என்பதை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்.

அம்மா சொன்ன யோசனையின் பேரில், தினமும் "தினத்தந்தி" வந்ததும், பெரிய எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் சேர்த்து படிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.

கலைஞரின் அழகுத் தமிழ் வசனங்கள் எனக்குப் பிடித்தன. கலைஞரின் வசனங்களை சிவாஜி சார் பேசுவது தனி அழகு. இந்த அழகு என்னை கவர்ந்ததால், கலைஞரின் வசனங்களையும் உச்சரிக்கப் பழகினேன்.

சமீபத்தில் ஒரு டெலிவிஷன் பேட்டியில் முதல்வர் கலைஞர் அவர்கள், தமிழில் நன்றாக வசனம் பேசும் 5 பேரைப் பற்றி கூறினார்கள். அந்த 5 பேரில் என்னையும் அவர் சேர்த்திருந்ததைப் பார்த்ததும், நிஜமாகவே நெகிழ்ந்து போய்விட்டேன். தமிழ்த்தாயின் தவப்புதல்வரின் அங்கீகாரம் கிடைத்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

இப்போது எனக்கிருக்கும் தமிழ் ஆர்வம் மட்டும் நான் நடிக்க வந்த புதிதில் இருந்திருந்தால், எனக்கு தமிழ் அல்லாத "ஸ்ரீபிரியா" என்ற பெயரைக்கூட வைக்க விட்டிருக்கமாட்டேன். இப்போது தமிழில் திருமூலரை படித்து ரசிக்கும் அளவுக்கு என்னை வளர்த்துக் கொண்டிருப்பதை எனக்கு கிடைத்த பெருமையாகவே உணர்கிறேன்" என்றார் ஸ்ரீபிரியா.

டைரக்டர் பி.மாதவனின் முதல் படத்தில் அறிமுகமான ஸ்ரீபிரியா, தனது 5-வது படமாக மீண்டும் மாதவன் இயக்கிய படத்தில் நடித்தார். அந்தப் படம் "பாட்டும் பரதமும்." சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில், அவருடன் ஜெயலலிதாவும், ஸ்ரீபிரியாவும் இணைந்து நடித்தனர்.

கதாநாயகிகள் இருவரே தவிர, ஒருநாள் படப்பிடிப்பில் கூட இருவரும் சேர்ந்து வருகிற மாதிரி காட்சிகள் வரவில்லை என்பதில் ஸ்ரீபிரியாவுக்கு ரொம்பவே வருத்தம். கதை அப்படி என்றாலும், கடைசியில் 'கிளைமாக்ஸ்' பாடல் காட்சியில் இருவரும் வருகிற மாதிரி ஒரு காட்சி இருந்தது. ஆனால் தனது காட்சியை முடித்துக் கொடுத்துவிட்டு ஜெயலலிதா போன பிறகே, ஸ்ரீபிரியா அந்தக் காட்சியில் நடிக்க அழைக்கப்பட்டார். அப்போதும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாததில் ஸ்ரீபிரியாவுக்கு ஏக வருத்தம். 
Tags:    

Similar News