சினிமா

ரோஜாவின் 100-வது படம் பொட்டு அம்மன்

Published On 2017-07-05 16:41 GMT   |   Update On 2017-07-05 16:41 GMT
கவர்ச்சிகரமாக நடிப்பதில் புகழ் பெற்ற ரோஜா, "பொட்டு அம்மன்'' என்ற பக்திப் படத்தில் நடித்தார். இது, அவருடைய நூறாவது படம்.
கவர்ச்சிகரமாக நடிப்பதில் புகழ் பெற்ற ரோஜா, "பொட்டு அம்மன்'' என்ற பக்திப் படத்தில் நடித்தார். இது, அவருடைய நூறாவது படம்.

தமிழில் கார்த்திக் -ரம்பா நடித்து பெரும் வெற்றியை எட்டிய படம் "உள்ளத்தை அள்ளித்தா.''

இந்தப் படத்தில் ரம்பா நடித்த கேரக்டரில் முதலில் ரோஜாதான் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் பிரபுவுடன் "பரம்பரை'', விஜயகாந்துடன் "தமிழ்ச்செல்வன்'' என்று 2 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் "உள்ளத்தை அள்ளித்தா'' படத்தில் நடிக்க முடியவில்லை.

ஆனால், இந்த ஏமாற்றத்தை விக்ரமன் இயக்கிய "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் போக்கிவிட்டது. விக்ரமன் தனது புதிய படத்தின் நாயகி ரோஜா என்று அறிவித்ததும், விக்ரமனின் நட்பு வட்டம் அவரிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். "ரோஜா கிளாமர் நடிகை. உங்கள் படத்தின் கதாநாயகியாக நடிக்க அவர் பொருத்தமாக இருக்கமாட்டார்'' என்று கூறினார்கள். ஆனால் விக்ரமன், "என் படத்தின் கதாநாயகி கேரக்டரை ரோஜா அப்படியே பிரதிபலிப்பார்'' என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

விக்ரமன் கணிப்புப்படியே, ரோஜாவும் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தார்.

இந்தப்படம் கிராமங்களில் உள்ள தியேட்டர்களில் கூட பிரமாதமாக ஓடியது. தெலுங்கில் வெங்கடேஷ் -சவுந்தர்யா நடிக்க `ரீமேக்' செய்தார்கள். தெலுங்கில் இந்தப்படம் வெற்றிப்பட்டியலில் சேர்ந்தாலும் தமிழ் அளவுக்கு இல்லை.

இந்த வெற்றியில்தான் ரசிகர்களால் ரோஜா ரொம்பவும் கவனிக்கப்பட்டார். ரோஜா எந்தக் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கையை "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் ஏற்படுத்தியது.

வேலுபிரபாகரன் இயக்கிய "கடவுள்'' படத்தில், ரோஜா மேக்கப் எதுவும் போடாமல் நடித்திருந்தார்.

ரஜினியுடன் ரோஜா நடித்த இரண்டாவது படம் "வீரா.''

இந்தப் படத்தில் காமெடி பிரதானமாக இருந்தது. ரோஜாவுடன் இன்னொரு நாயகியாக மீனாவும் நடித்தார். ரஜினிக்கு இரண்டு பேரை ஜோடிகளாகப் போட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை "வீரா'' நிரூபித்தது.

இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம். ரோஜா -மீனா இருவருமே, படத்தில் ஒருவரை ஒருவர் "அக்கா'' என்று அழைத்துக்கொண்டார்கள்!

"வீரா'' படத்தில் ரஜினியுடன் காமெடிக் காட்சியிலும் சிறப்பாக ரோஜா நடித்தார்.

ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடித்தபோதே அவருடன் நல்ல நட்பு இருந்தது. `வீரா' படத்தில் இந்த நட்பு புதுப்பிக்கப்பட்டு, நகைச்சுவை காட்சிகளில் இயல்பாக நடித்தார், ரோஜா.

இரண்டு நாயகிகள் நடிக்கும் படம் என்றால் அதில் தனது கேரக்டர் பற்றி, முன்னதாகவே முழுமையாக ரோஜா தெரிந்து கொள்வார். இந்தப் படத்தில் கிராமத்துப் பின்னணியில் வரும் காட்சிகளில் மீனாவும், நகரப் பின்னணியில் ரோஜாவும் என ஜோடிகள் சமமாக இருந்ததால், உற்சாகமாக நடித்தார், ரோஜா.

ரோஜாவின் நூறாவது படம் "பொட்டு அம்மன்.''

சினிமா நட்சத்திரங்களுக்கு நூறாவது படம் என்பது, முக்கியமான மைல் கல். "என்னுடைய நூறாவது படம் பக்திப் படமாக அமைந்ததில் மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப்படம் ரசிகர்களை கவரவில்லை. "உழைப்பது நம் கடமை. பலன் தருவது இறைவன் அல்லவா'' என்று கூறுகிறார், ரோஜா.

சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த நேரத்திலேயே, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது ரோஜாவுக்கு. "நதி எங்கே போகிறது'' என்ற தொடரில் நடிக்க கணிசமான சம்பளமும் பெற்றார் ரோஜா. ஆயினும் அந்த தொடரை ரோஜாவினால் தொடர முடியவில்லை. காரணம், சம்பளம் அதிகம் என்பதால் தினமும் ஏராளமான காட்சிகளை எடுத்துக் குவித்தார்கள். இதனால், மன நிறைவு அளிக்கும் வகையில் நடிக்க முடியாது என்று கருதிய ரோஜா, இடையிலேயே விலகிக்கொண்டார்.

அதன் பிறகு வந்த சின்னத்திரை வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை.
Tags:    

Similar News