சினிமா

இளையராஜா இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்த எம்.எஸ்.விஸ்வநாதன்

Published On 2017-05-08 16:39 GMT   |   Update On 2017-05-08 16:39 GMT
திருச்சியை அடுத்த பொன்மலையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை "மெல்லிசை மன்னர்'' எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்துப் பாராட்டினார்.
திருச்சியை அடுத்த பொன்மலையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை "மெல்லிசை மன்னர்'' எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்துப் பாராட்டினார்.

கம்ïனிஸ்டு கட்சிக்காக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து, இளையராஜா இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த காலக்கட்டம் அது.

அப்போது நடந்த நிகழ்ச்சிகளை இளையராஜா நினைவு கூர்ந்தார்:

"இளம் வயதில், என் நண்பர்களில் எனக்கு முதன்மையானவர்கள் இருவர். ஒருவர் கரியணம்பட்டி எம்.சுப்பிரமணி. என் வகுப்புத் தோழன். இரண்டாவது பாரதிராஜா.

பாரதி இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலாது. இன்று வரை அந்த நட்பில் குறைவில்லை.

படிக்கும் நேரத்தில் மணியுடன் அதிகமாகப் பழகவில்லை என்றாலும், பி.யு.சி.யில் இருந்து என்ஜினீயரிங் படித்து முடிக்கும் வரை இருந்த நட்பு, அதன் பின்னும் - சினிமாவில் வாய்ப்பு கிடைத்த பிறகும் தொடர்ந்தது.

மதுரையில் தங்க நேரும்போதெல்லாம் மணியுடன்தான் அதிகமாக இருப்பேன். சினிமா, வைகை மணல்வெளி, திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஏரிக்கரை, மீனாட்சி கோவில் என்று நாட்கள் கழியும்.

விடுமுறை காலங்களில், ஒன்று நான் கரியணம்பட்டியில் மணியுடன் தங்குவேன். அல்லது மணி என் வீட்டில் தங்குவார்.

மாலை நேரங்களில் புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு கரியணம்பட்டி ஏரிக்கரை நந்தவனம் அல்லது மேற்கே வீராந்தோப்புக்கு சென்று நான் வாசிக்க - அல்லது பாஸ்கர் இருந்தால் பாஸ்கர் வாசிக்க, இதமாகப் பொழுதுபோகும்.

போதாதற்கு "கல்கி''யின் வந்தியத்தேவனும், குந்தவையும், வானதியும், சிவகாமியும், பார்த்திபனும் எங்கள் கற்பனைகளைத் தூண்டி, அந்த சரித்திர காலத்திற்கே இழுத்துச் சென்று விடுவார்கள்.

அவ்வப்போது வீட்டில் இசை பிராக்டிஸ் செய்து கொண்டிருப்போம். நண்பர்கள் கூடிவிடுவார்கள். ஆளுக்கொரு பாடலாகச் சொல்ல, வாசித்துக் கொண்டிருப்போம்.

இடையில், திடீரென்று தம்பி அமர் எழுதிய பாடலுக்கு, நான் இசை அமைத்த பாடலை வாசிப்பேன்.

"இது எந்தப் படத்தில் வரும் பாடல்?'' என்று பலர் கேட்பார்கள். `நம் பாடல், சினிமாப் பாடலின் தரத்துக்கு உயர்ந்து விட்டதே' என்று மனதுக்குள் சந்தோஷமாக இருக்கும்.

"படம் இன்னும் வரவில்லை. எம்.எஸ்.வி. இசை அமைத்த பாடல்'' என்போம்.

நண்பர்கள் குழுவில் இரண்டொருவர் தவிர எல்லோரும் எம்.எஸ்.வி.யின் ரசிகர்கள். அடிக்கடி நாங்கள் அவர் பாடலையே வாசிப்பதால், அத்தனை ஈர்ப்பு.

அப்படியே சீட்டாட்டம் தொடங்குவோம். "நாக் அவுட்'' - 25 காசு!

யார் கடைசியில் ஜெயிக்கிறாரோ, அவர் பண்ணைபுரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள சுப்புசாமி நாயக்கர் கடையில் இட்லி - டிபன் வாங்கித்தர வேண்டும்.தி.மு.க. வெற்றி

1967 தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

1957 தேர்தலில் 50 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்த கம்ïனிஸ்டு கட்சி, 1962-ல் 11 ஆகக் குறைந்து, 1967-ல் 2 எம்.எல்.ஏக்களை மட்டுமே பெற்றது. பாலதண்டாயுதமும், சி.ஏ.பாலனும் தூக்கு மேடையிலிருந்து திரும்பி, தி.மு.க.வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தும் பலன் இல்லை.

தி.மு.கழகம் மந்திரிசபை அமைத்தது. அண்ணா முதல்-அமைச்சர் ஆனார்.

1967 கடைசியிலோ, 1968 ஆரம்பத்திலோ, பொன்மலை ரெயில்வே காலனியில் எங்கள் கச்சேரி இருந்தது. நல்ல கூட்டம். கச்சேரி முடிந்து, பொன்மலை தோழர்களுடன் சாப்பிடப்போனோம்.

அப்போது, எங்கள் கச்சேரியை எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டிருந்தார் என்று தோழர்கள் சொன்னார்கள். எங்களுக்கு `ஷாக்'

அடித்தது."எம்.எஸ்.வி. அண்ணன் எங்கள் கச்சேரியை கேட்டாரா!'' என்று நாங்கள் ஆச்சரியத்துடன் கேட்க, நண்பர்கள் `ஆமாம்' என்று மீண்டும் சொன்னார்கள்.

எம்.எஸ்.வி.யின் மாமா வீடு பொன்மலையில் இருந்தது. சென்னை போகும் வழியில் அங்கு தங்கியிருக்கிறார். அப்போது எங்கள் கச்சேரியைக் கேட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம்.

இரவு வெகு நேரமாகி விட்டதால், எம்.எஸ்.வி. தூங்கச் சென்றிருக்கலாம் என்று நினைத்தோம். மறுநாள் காலை அவரைச் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

அன்றிரவு திருச்சி உறைïரில், கட்சி ஆபீசில் தங்கினோம். தூக்கம் வரவில்லை. மறுநாள் எம்.எஸ்.வி.யைப் பார்ப்பது பற்றியே சிந்தனை.

மறுநாள் காலையில் முதல் வேலையாக, எம்.எஸ்.வி. அவர்களைப் பார்த்துவிட்டு வருமாறு தம்பி அமரை அனுப்பினோம். `எப்போது வருவான், எப்போது வருவான்' என்று காத்திருந்தோம். அமர் திரும்பி வந்தான். `என்ன ஆச்சு, என்ன ஆச்சு?' என்று கேட்டோம்.

`எம்.எஸ்.வி. இரவே சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்' என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனோம். என்றாலும், அமர் சொன்ன விவரங்கள் எங்களுக்கு ஆறுதல் அளித்தன.

"எம்.எஸ்.வி.யின் மாமாவுடன் அரை மணி நேரம் பேசிவிட்டு வருகிறேன். நாம் கச்சேரி செய்தபோது, எம்.எஸ்.வி. அண்ணன் வீட்டுக்கு வெளியே ஈசிசேரைப் போட்டு உட்கார்ந்து, கச்சேரியை ரசித்துக் கேட்டிருக்கிறார். `இந்தப்பசங்க, நல்லா வாசிக்கிறாங்க' என்று பாராட்டியிருக்கிறார்...''

இவ்வாறு அமர் சொன்னதும் ஆனந்தத்தில் மிதந்தோம். அதே சமயம், `ஆகா! எப்பேர்ப்பட்ட மேதை நம் பாட்டைக் கேட்டிருக்கிறார்! அவரை சந்திக்க முடியாமல் மிஸ் பண்ணிவிட்டோமே' என்ற வருத்தமும் மேலிட்டது.''

இவ்வாறு கூறினார், இளையராஜா.

Tags:    

Similar News